Published : 01 Apr 2016 04:03 PM
Last Updated : 01 Apr 2016 04:03 PM
உலகக்கோப்பை டி20 போட்டித் தொடரில் இந்திய அணியில் ஜடேஜாவின் பங்களிப்பு குறிப்பிடும்படி அமையவில்லை. நேற்று அரையிறுதியில் அவர் 4 ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார்.
இதில் ரன் இல்லாத 5 பந்துகள் போக 4 பவுண்டரி 3 சிக்சர்களை விட்டுக் கொடுத்தார். ஆக, 12 பந்துகளில் 34 ரன்கள், சரியாகக் கூறுவதென்றால் 7 பந்துகளில் 34 ரன்கள், ஆனால் டாட் பந்துகளையும் சேர்த்துதான் ஆகவேண்டும் எனவே கிட்டத்தட்ட ஒரு பந்துக்கு 3 ரன்கள் என்ற விகிதத்தில் அவர் கொடுத்துள்ளார். இது சர்வதேச கிரிக்கெட்டில், இவர் அளவுக்கு மூன்று வடிவங்களிலும் விளையாடும் மற்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர்களிடத்தில், காணக்கிடைக்காத ஒரு விஷயமாகும்.
ஆனால், ஏனோ தோனி, ஜடேஜாவை ஒரு நம்பத்தகுந்த பவுலராகத் தொடர்ந்து அவருக்கு முக்கியத் தருணங்களில் ஓவர்களை அளித்து வருவது, தோனியின் கிரிக்கெட் அனுபவம் மீதே சந்தேகத்தை கிளப்புகிறது.
அஸ்வினுக்கு ஏன் 2 ஓவர்கள்தான் கொடுக்கப்பட்டது என்றால் அதற்கு மைதானத்தின் பனிப்பொழிவு, பந்தின் தையல் ஈரமாக இருந்தது, ஈரமான பிட்ச்சில் பந்துகள் மட்டைக்குச் சுலபமாக வருகின்றன, இதனால் அஸ்வினுக்குக் கொடுக்கப்படவில்லை என்று கூறும் அவர் ஜடேஜாவுக்கு ஏன் கொடுத்தார் என்ற கேள்வி எழுகிறது, இரண்டு வலது கை பேட்ஸ்மென்கள் கிரீஸில் இருந்ததால் இடது கை வீச்சாளர் பயனளிப்பார் என்கிறார் தோனி, இது அவரது முந்தைய கூற்றுக்கு முரணாக ஒலிக்கிறது. வலது கை பேட்ஸ்மென்களுக்கு ஜடேஜா வீசினால் அப்போது ஸ்பின் ஆகிவிடுமா? அஸ்வினுக்கு ஸ்பின் ஆகாத ‘ஈரப்பந்து’ ஜடேஜாவுக்கு ஸ்பின் ஆகி விட்டதா? இல்லை. இங்குதான் ஜடேஜாவின் தரம் பற்றிய கேள்வி நமக்கு எழுகிறது.
பிட்சில் உதவியில்லையெனில் ஜடேஜா அங்கும், இங்கும், எங்கும் வீசுகிறார். நேற்று ஒன்று நேராக லெந்தில் வீசி வாங்கிக் கட்டிக் கொண்டார், அல்லது ரவுண்ட் த விக்கெட்டில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வைடாக வீசினார். இது உண்மையில் கிரிக்கெட்டின் அடிப்படைகளுக்கு புறம்பானது, ஸ்பின்னருக்கு டீப் பாயிண்ட் நிறுத்த மாட்டார்கள், ஸ்வீப்பர் கவர்தான் நிறுத்துவார்கள். ஆனால் ஜடேஜா வீசிய வைடு பந்துகள் பாயிண்ட் திசையிலேயே பறந்தன, இவருக்கு எப்படி தோனி பீல்ட் செட் செய்வார்? ஆனாலும் அவரிடமே தொடர்ந்து ஓவர் கொடுக்கப்பட்டது. பாயிண்ட் மட்டும் அல்லாமல் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியேயான பந்து 19-வது ஓவரில் ஜடேஜாவின் தலைக்கு மேலே தூக்கி அடிக்கப்பட்டது. மீண்டும் ஆஃப் ஸ்டம்ப்புக்கு வெளியே ஓவர் பிட்சாக வீச அதுவும் பவுண்டரி.
ஜடேஜாவை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம், இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளில் தோனி அவருக்கு இடம் கொடுத்தார், ஆனால் அவரால் அந்தத் தொடரில் ஒரு பந்தைக் கூட திருப்ப முடியவில்லை. அயல்நாடுகளில் ஒருநாள் போட்டிகளிலும் ஜடேஜாவின் இத்தகைய போதாமையை போதும் என்ற அளவுக்கு நாம் பார்த்தாகிவிட்டது.
இயன் சாப்பல் தனது அலசலில் குறிப்பிடும்போது, பிட்சில் சுழலுக்கு சாதகம் இல்லாத போது ஜடேஜாவுக்கு எங்கு வீசுவது என்றே புரியவில்லை என்றார். மகேலா ஜெயவர்த்தனேயும், பிட்சில் பந்துகள் பேட்டிற்கு நன்றாக வருகிறது என்றால் ஒரு ஸ்பின்னர் வேகமாக வீசக்கூடாது, ஜடேஜா நேற்று ஃபிளாட்டாக, நேராக, வேகமாக வீசினார். வேகத்தைக் கூட்டியும் குறைத்தும், அளவையும் மாற்றி மாற்றி வீசி முயற்சி செய்திருக்க வேண்டும் என்கிறார் மகேலா. மேலும் அவர் இதற்கு உதாரணமாக டேனியல் வெட்டோரியைக் குறிப்பிட்டார், தற்போது நியூஸிலாந்து அணியில் சாண்ட்னர் இதனைச் சிறப்பாகச் செய்கிறார் என்றார் மகேலா.
இது ஜடேஜாவுக்குக் கைகூடவில்லை. இந்திய பிட்சாக இருந்தாலும், அவர் ஏகப்பட்ட உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடியிருந்தாலும், அதில் அவர் விக்கெட்டுகளைக் குவித்திருந்தாலும் பிட்சை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை. உலகத்தரம் வாய்ந்த வீச்சாளர்கள் பிட்சிற்கு எதிராக போராடுவார்கள், சூழலுக்கு எதிராக போராடுவதுதான் எந்த ஒரு வீரரின் தரநிலையை மதிப்பிடுகிறது. இந்த விதத்தில் பிராக்யன் ஓஜா கூட ஜடேஜாவை விட சிறந்த இடது கை ஸ்பின்னர்தான். நம் அணி இயக்குநர் ரவி சாஸ்திரி ஒரு இடது கை ஸ்பின்னர்தான், ஆனால் அவர் இருந்தும் ஜடேஜா இவ்வாறு மோசமாக வீசியது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நேற்று ஜடேஜாவை ஒப்பு நோக்குகையில் மே.இ.தீவுகள் இடது கை ஸ்பின்னர் சுலைமான் பென் கூட பரவாயில்லை என்றே தோன்றுகிறது.
மேலும் இந்த உலகக்கோப்பையில் லெக் ஸ்பின்னர்கள் அபாரமாக வீசினர், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஸாம்ப்பா, நியூஸிலாந்தின் ஐ.எஸ்.சோதி, ஆப்கன் அணியின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் என்று சிறப்பாக வீசினர், அன்று மே.இ.தீவுகளை வீழ்த்திய ஆப்கன் அணி ஸ்பின்னர்கள் மொகமது நபி, மற்றும் ரஷித் கான் ஆகியோர் 123 ரன்களை எடுக்க விடாமல் செய்து வெற்றி பெற்றனர்.
ஆனால், இந்திய அணியில் நல்ல லெக் ஸ்பின்னர்கள் இருந்தும் அவர்கள் தேசிய அணியில் இடம்பெற முடியவில்லை, உதாரணமாக அமித் மிஸ்ரா டெஸ்ட் போட்டிகளிலும் உள்நாட்டு கிரிக்கெட்டிலும், ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அஸ்வின் இல்லாத போது சிறப்பாக செயல்பட்டார், அவருக்கு இடமில்லை. அதே போல் ஜம்மு காஷ்மிர் வலது கை ஆஃப் பிரேக் ஸ்பின்னர்/ஆல்ரவுண்டர் பர்வேஸ் ரசூல் இருக்கிறார். ஆனால் இவர்கள் அணியில் இடம்பிடிக்க முடிவதில்லை. நிச்சயம் ஜடேஜாவுக்குப் பதிலாக இவர்களை முயன்று பார்க்கலாம்.
ஒரே பந்துவீச்சு வரிசையை 10 போட்டிகளுக்கு மேல் வைத்திருந்தால், இன்றைய அதிரடி கிரிக்கெட் காலக்கட்டத்தில் நிச்சயம் இம்மாதிரி நாக்-அவுட் போட்டிகளில் வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. கிரிக்கெட் ஆட்டம் என்பதே பல்வேறு தரப்பு வீச்சாளர்களும் மாறி மாறி அணியில் இடம்பெற்று எதிரணியினரை யூகத்தில் சிக்க வைப்பதே. பேட்டிங்கில் நிலையான ஒரு 4-5 வீரர்கள் தேவை. ஆனால் பந்து வீச்சில் எப்போதும் ‘வெரைட்டி’ இருந்தால்தான் அதிரடி எதிரணியினரை நாம் எப்போதும் யூகத்திலும், சந்தேகத்திலும் வைத்திருக்க முடியும்.
உலகக்கோப்பையை வெல்லும் ஒரு அணியாக எதிர்பார்ப்புகளுடன் களமிறங்கிய இந்திய அணி இத்தகைய நெகிழ்வுத் தன்மை இல்லாத மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட, நிலையான தன்மையை காக்கும் முயற்சியில் தோல்வி கண்டது. தென் ஆப்பிரிக்கா இத்தகைய நிலையான தன்மையை காக்கும் போக்கில்தான் அந்த அணியினால் உலகக்கோப்பையை வெல்ல முடியவில்லை. அந்த அணியில் எல்லாமே திட்டமிட்டபடிதான் நடக்கும், திடீர் முயற்சிகள் எதுவும் அனுமதிக்கப்படாது. அணித் தேர்வு முதல் ஆடும் ஷாட்கள் வரை, பந்து வீச்சில் எந்த ஓவரை எவர் வீச வேண்டும் என்பது வரை அனைத்தையும் முன் கூட்டியே திட்டமிட்டு விடலாம் என்பது ஒருவகையான ஆதிக்கவாத மனோபாவமே. ஆனால், திடீர் மாற்றங்களும், எதிர்பாராத காய் நகர்த்தல்களும் கற்பனை வளம் மிக்க உத்திகளுமே சிறந்த அணிகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை 70-80களின் மே.இ.தீவுகள் அணியிலும் எப்போதும் ஆஸ்திரேலிய அணியிலும் பார்க்கலாம்.
இப்போதெல்லாம் கேப்டன்களைக் குறை கூறியும் பயனில்லை. ஏனெனில் ஒரு கேப்டனுக்கு அறிவுரைகள், ஆலோசனைகள் என்ற பெயரில் ஏகப்பட்ட விரயமான விஷயங்கள் வந்து குவிகின்றன, அவரால் சுதந்திரமாகச் செயல்பட முடியாத ஒரு நிலைமையே உள்ளது. ஆனால் கேப்டன்களே கூட இப்போதெல்லாம் ‘திட்டமிடுதல்’, ’சரியான திட்டம்’, ‘திட்டத்தை சரியாக செயல்படுத்துதல்’ என்ற ரீதியில் ஒரு ஆதிக்கவாத மனோபாவத்திற்குத் தங்களை ஒப்புக் கொடுக்கின்றனர். தோனி அடிக்கடி ‘திட்டம்’, ‘செயல்படுத்துதல்’, ‘இவருக்கு இவர்தான் வீச வேண்டும்’, ’அப்போது அவர் சரிப்பட்டு வரமாட்டார்’ என்றெல்லாம் பேட்டியில் கூறிவருவது அவரும் ஒரு 'regimented' அணியை கற்பனை செய்வதாகவே படுகிறது. எந்த ஒரு துறையிலும் கறாரான முறைமையை நோக்கிச் சென்றால் அது கற்பனை வளத்தைக் கொன்று விடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT