Published : 13 Apr 2022 10:38 AM
Last Updated : 13 Apr 2022 10:38 AM
மும்பை: கேப்டனாக தான் பெற்ற முதல் வெற்றியை தனது மனைவிக்கு சமர்ப்பிப்பதாக தெரிவித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா.
நடப்பு ஐபிஎல் சீசனின் 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடின. இந்த போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது சிஎஸ்கே. இது இந்த சீசனில் சென்னைக்கு கிடைத்துள்ள முதல் வெற்றியாகும். இதற்கு முன்னதாக நான்கு போட்டிகளில் சென்னை அணி தோல்வியை தழுவியிருந்தது. அணியின் கூட்டு முயற்சியின் மூலம் சென்னை வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
போட்டி முடிந்த பிறகு கேப்டன் ஜடேஜா தெரிவித்தது, “ஒரு கேப்டனாக நான் பெற்றுள்ள முதல் வெற்றி இது. இதனை எனது மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். கடந்த நான்கு போட்டிகளில் எங்களால் கடக்க முடியாத வெற்றிக் கோட்டை இப்போது கடந்துள்ளோம். ராபின் உத்தப்பா மற்றும் ஷிவம் துபேவின் அற்புதமான பேட்டிங் இதற்குக் காரணம்.
எங்கள் அணியின் உரிமையாளர்களும் சரி, நிர்வாகமும் சரி எனக்கு எந்தவிதமான அழுத்தமும் கொடுக்கவில்லை. மாறாக அவர்கள் எனக்கு ஊக்கம்தான் கொடுத்தார்கள். அணியில் உள்ள மூத்த வீரர்களின் அறிவாற்றலை நான் பயன்படுத்திக் கொள்கிறேன். தோனியிடம் சென்று நான் ஆட்டம் தொடர்பாக விவாதிப்பதும் உண்டு. ஒரு கேப்டனாக பக்குவம் அடைய நேரம் பிடிக்கும். ஒவ்வொரு நாளும் நான் கற்றுக் கொண்டு வருகிறேன். எனது பணியை சிறப்பாக கவனிப்பேன். எங்கள் அணியில் அனுபவம் அதிகம் உள்ளது. நாங்கள் அச்சம் கொள்ள மாட்டோம். பாசிட்டிவ் மனநிலையில் ஆட்டத்தை அணுகுவோம்”.
இந்தப் போட்டியில் ஜடேஜா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியிருந்தார். அதோடு கடைசி நேரத்தில் பெங்களூரு அணிக்கு நம்பிக்கை கொடுத்து வந்த தினேஷ் கார்த்திகை பவுண்டரி லைனில் அற்புதமான கேட்ச் பிடித்து வெளியேற்றியிருந்தார் ஜடேஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT