Published : 10 Apr 2016 12:03 PM
Last Updated : 10 Apr 2016 12:03 PM

ஐபிஎல் 2016: ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி

மும்பையில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2016 டி20 தொடரின் முதல் போட்டியில் தோனி தலைமை ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட் செய்யத் தீர்மானித்தார். அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 121 ரன்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஆடிய ரைசிங் புணே அணி 126/1 என்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இலக்கைத் துரத்திய போது அஜிங்கிய ரஹானே அற்புதமாக ஆடி 42 பந்துகளில் 66 ரன்கள் எடுக்க புனே அணி எளிதில் வெற்றியை ருசித்தது.

மும்பை அணி பேட் செய்த போது இருந்த பிட்ச் பிற்பாடு இல்லை, இதனால் ரஹானே எளிதில் தனது ஆட்டத்தைத் தொடங்கினார், மெக்லினாகனை 2 நேர் பவுண்டரிகள் அடித்தார். மேலும் ரஹானேயும், ஃபா டுபிளெசியும் மிஸ்ஹிட்களில் சிக்சர்களைச் சேகரித்துக் கொண்டனர். டுபிளெசி 3 சிக்சர்களுடன் 34 ரன்களில் ஹர்பஜன் பந்தில் பிளேய்ட் ஆன் பவுல்டு ஆனார்.

பீட்டர்சன் இறங்கி ஹர்பஜனை இரண்டு ராட்சத சிக்சர்கள் விளாச, ரஹானே 4 பந்துகளில் 2 சிக்சர்கள் விளாசி வெற்றியை விரைவு படுத்தினர். அதாவது ஹர்திக் பாண்டியாவை லாங் ஆனில் ஒரு சிக்சரையும் பிறகு தேர்ட் மேன் மேல் ஒருசிக்சரையும் ரஹானே விளாசினார்.

ஆனால் இலக்கு குறைவாக இருந்தாலும் மும்பை அணி தனது வாய்ப்புகளையும் கோட்டை விட்டது, ஜோஸ் பட்லர் டுபிளெஸிக்கு ஒரு ரன் அவுட் வாய்ப்பை நழுவ விட ஷ்ரேயஸ் கோபால் ரஹானேவுக்கு தன் பந்துவீச்சில் கேட்ச் வாய்ப்பை கோட்டை விட்டார்.

முன்னதாக பிட்சில் பவுன்ஸும், பந்துகள் ஸ்விங்கும் ஆக, மிட்செல் மார்ஷ் மற்றும் இசாந்த் சர்மா வாய்ப்பை அருமையாகப் பயன்படுத்தினர், குறிப்பாக இசாந்த் சர்மாவின் பந்துகள் எழும்பி பேட்ஸ்மென்களைப் படுத்தின, இருவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்த சிம்மன்ஸ், ரோஹித் சர்மா, பாண்டியா, ஜோஸ் பட்லர் ஆகியோர் வெளியேற மும்பை 30/4 என்று ஆனது. ரஜத் பாட்டியா தனது ஆஃப் கட்டர் பந்தில் கெய்ரன் பொலார்டை எல்..பி.யாக்க 40/5 ஆனது மும்பை.

ரஜத் பாட்டியா ஸ்டம்புக்கு நேராக வீசி ஆஃப் கட்டரை அவ்வப்போது திறம்பட பயன்படுத்தியதற்கு பிட்ச் ஒரு காரணம், பந்துகள் பிட்சாகி நின்று வந்தது பாட்டியாவுக்கு சவுகரியமாகப் போனது. இவர் இதனால் 4 ஓவர்களில் 10 ரன்களை மட்டும் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். ஷ்ரேயஸ் கோபால் 16 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தவர், ரஜத் பாட்டியாவின் 9 பந்துகளில் ரன் எடுக்க முடியாமல் திணறினார்.

தமிழகத்தின் அறிமுக லெக் ஸ்பின்னர் முருகன் அஸ்வினிடம் ஷ்ரேயஸ் கோபால் ஆட்டமிழந்தார். கொஞ்சம் ஷார்ட் ஆக வீசினார் முருகன் அஸ்வின், ஆனால் பிட்சில் பந்துகள் நின்று ஏகப்பட்டது திரும்பியதால் இந்த ஷார்ட் பிட்ச் பந்துகளில் மும்பை பேட்ஸ்மென்கள் பவுண்டரி அடிக்க முடியவில்லை. நல்ல கூக்ளியும் இவரிடம் உள்ளது, இந்த ஐபிஎல் சீசனில் முருகன் அஸ்வின் கலக்குவதற்கான தடயங்கள் தெரிகின்றன.

ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ஓவர்தான் வீசினார், இதில் 7 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார், தொடர்ந்து ரவிச்சந்திரன் அஸ்வினை குறைவாக தோனி பயன்படுத்துவது பற்றி அவர் விளக்கமளிக்கும் நிலைக்கு விரைவில் தள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தனைக்கும் அஸ்வின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தினார் ஆனால் 4 ஓவர்கள் வீச வாய்ப்பில்லாமல் போனது. 15 ஓவர்கள் கழித்தே தோனி, அஸ்வினிடம் பந்தை அளித்தார். ஆனால் கொடுத்த முதல் ஓவருக்குப் பிறகு அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார்.

இதனால்தான் கடைசி ஓவர்களில் ஹர்பஜன் சிங் விளாச நேர்ந்தது, ஹர்பஜன் 30 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 45 ரன்கள் எடுத்ததால், மும்பை அணி 68/7-லிருந்து 121 ரன்களை எட்டியது. ஆட்ட நாயகனாக ரஹானே தேர்வு செய்யப்பட்டார்.

முருகன் அஸ்வின் 4 ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x