Published : 11 Apr 2022 07:03 PM
Last Updated : 11 Apr 2022 07:03 PM

IPL 2022 | ’மகன் ஆட்டத்தை சலூன் கடையில் ரசித்த தந்தை’ - கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசிய குல்தீப் சென் யார்?

மும்பை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் அற்புதமாக பந்துவீசி ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார் இளம் பவுலர் குல்தீப் சென். யார் இவர்? - சற்றே விரிவாகப் பார்ப்போம்.

நடப்பு ஐபிஎல் சீசனின் 20-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்து 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மெயர், அஷ்வின், போல்ட், சஹால் என சர்வதேச கிரிக்கெட் களத்தில் முத்திரை பதித்த வீரர்களுடன் இளம் வீரர் குல்தீப் சென்னும் தன் அணியின் வெற்றி பெற உதவினார். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட வெறும் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து வெற்றி பெற செய்தார் குல்தீப் சென்.

அதுவும் கிரிக்கெட் பந்தை காட்டுத்தனமாக ஸ்டிரைக் செய்யும் ஸ்டாய்னிஸ் ஸ்ட்ரைக்கில் இருக்க மூன்று பந்துகளை டாட் பந்துகளாக (ரன் ஏதும் கொடுக்காத) வீசி அசத்தியிருப்பார். ஐபிஎல் களத்தில் உள்ளூர் கிரிக்கெட் வீரார்கள் முத்திரை பதிப்பது வழக்கம். கடந்த காலங்களில் அப்படி பல வீரர்கள் நட்சத்திரங்களாக தாங்கள் சார்ந்த அணிக்காக மிளிர்ந்துள்ளனர். இந்த சீசனில் உருவாகியுள்ள நட்சத்திரங்களில் ஒருவர் தான் குல்தீப் சென்.

யார் இவர்?

25 வயதான குல்தீப் மத்தியப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். அந்த மாநிலத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரேவா மாவட்டத்தில் உள்ள ஹரிஹர்பூர் பகுதியை சார்ந்தவர். அவரது தந்தை ராம்பால் சென் அதே ஊரில் முடிதிருத்தும் பணியை கவனித்து வருகிறார். அவர் அங்கு சிறியதாக கடை ஒன்று நடத்தி வருகிறாராம்.

2018 முதல் மத்தியப் பிரதேச அணியில் அவர் விளையாடி வருகிறார் குல்தீப். பத்து ஆண்டுகளுக்கு முன்னர் விந்தியா கிரிக்கெட் அகாடமியில் தொழில்முறை கிரிக்கெட் பயிற்சி பெற தொடங்கியுள்ளார் அவர். அவரது குடும்ப நிலையை அறிந்து கொண்டு பயிற்சிக்கான கட்டணத்தில் அவருக்கு 100 சதவீத விலக்கு கொடுக்கத்துள்ளது அந்த அகாடமி.

அவுட்-ஸ்விங் வீசுவதில் குல்தீப் வல்லவராம். மணிக்கு 135 முதல் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் திறன் படைத்தவர் எனவும் தெரிகிறது. சமயங்களில் இன்-கட்டர்களையும் வீசி பேட்ஸ்மேன்களை இம்சிப்பாராம். அவரை 20 லட்ச ரூபாய்க்கு வாங்கியிருந்தது ராஜஸ்தான் அணி.

ராஜஸ்தானுக்காக லக்னோ அணிக்கு எதிரான போட்டியில்தான் அவர் அறிமுக வீரராக களம் கண்டார் அறிமுகப் போட்டியில் அபாரமாக அவர் பந்துவீசி அசத்திய போது அதனை அவரது தந்தை சலூன் கடையில் இருந்து பார்த்ததாக உள்ளூர் நாளேடுகளில் செய்தி வெளியாகியுள்ளது.

“நெருக்கடியான தருணங்களில் பந்து வீசும் போதுதான் திறன்களை வளர்த்துக் கொள்ள முடியும். குல்தீப் அதனை திறன்பட கையாண்டிருந்தார்” என சொல்லி அவரை பாராட்டியுள்ளார் ராஜஸ்தான் வீரர் போல்ட். வரும் நாட்களில் மேலும் பல போட்டிகளில் மேட்ச் வின்னராக அவர் ஜொலிப்பார் என எதிர்பார்ப்போம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x