Published : 10 Apr 2022 05:35 PM
Last Updated : 10 Apr 2022 05:35 PM
மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 215 ரன்களை குவித்தது. டேவிட் வார்னர் 61 ரன்களை குவித்து அதிரடி காட்டினார்.
ஐபிஎல் 15-வது சீசனின் 19-வது லீக் ஆட்டத்தின் இன்றைய போட்டியில் டெல்லி அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி டெல்லி அணியின் இன்னிங்க்ஸை பிரித்வி ஷா, டேவிட் வார்னர் தொடங்கி வைத்தனர்.
சிறப்பான தொடக்கத்தை கொடுத்த இந்த இணையை 8 ஓவரில் வருண் சக்ரவர்த்தி பிரித்தார். அவர் வீசிய பந்து பிரித்வி ஷாவைக் கடந்து ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. 29 பந்துகளில 51 ரன்களை குவித்த அவர், நடையைக்கட்டினார். அடுத்ததாக ரிஷப் பண்ட் களமிறங்க 10 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 101 ரன்களை சேர்த்திருந்தது டெல்லி அணி.
14 பந்துகளில் 27 ரன்களை குவித்திருந்த ரிஷப் பண்ட் ரஸ்ஸல் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த லலித் யாதவும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரோவ்மேன் பாவெலும் வந்த வேகத்தில் 8 ரன்களுடன் திரும்பிச் சென்றார். மறுபுறம் நிலைத்து ஆடி அணிக்கு நம்பிக்கை கொடுத்த டேவிட் வார்னரை 16-வது ஓவரை வீசிய உமேஷ் யாதவ் வெளியேற்றினார்.
45 பந்துகளில் 61 ரன்களை குவித்து அணிக்கு பலமாக திகழ்ந்தார் வார்னர். இதையடுத்து 17 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்திருந்தது டெல்லி அணி. தொடர்ந்து, அக்ஷர் படேலும், ஷர்துல் தாக்கூரும் இணைந்து அணியின் ரன்ரேட்டை ஏற்றினர். அதன்படி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு டெல்லி அணி 215 ரன்களை சேர்த்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT