Published : 09 Apr 2022 07:36 PM
Last Updated : 09 Apr 2022 07:36 PM
மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 4-வது தொடர் தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் டி.ஒய்.பாட்டீல் கிரிக்கெட் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஹைதராபாத் அணிகள் நடப்பு சீசனின் 17-வது லீக் ஆட்டத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், முதலில் தங்கள் அணி பந்து வீசும் என தெரிவித்தார். அதனால், சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ராபின் உத்தப்பா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில் உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் 16 ரன்களிலும் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர். மூன்றாவது விக்கெட்டுக்கு 62 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர் மொயின் அலி மற்றும் ராயுடு. 27 ரன்கள் எடுத்து அவுட்டானார் ராயுடு. தொடர்ந்து 35 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து அவுட்டானார் மொயின் அலி.
பின்னர் பேட் செய்த ஜடேஜா 23 ரன்கள் எடுத்து அவுட்டானார். தோனி மற்றும் தூபே 3 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி வெளியேறினர். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது சென்னை.
ஹைதராபாத் அணிக்காக நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி வெறும் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
இதையடுத்து 154 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு கேன் வில்லியம்ஸ், அபிஷேக் ஷர்மா இணை துவக்கம் கொடுத்தது. சிறப்பான ஆட்டத்தை தொடங்கிய இந்த இணை 10 ஓவரில் 69 ரன்களை சேர்த்தது. இந்த இணையை 13-வது ஓவர் வீசிய முகேஷ் சௌத்ரி பிரித்தார். அவர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து கேன் வில்லியம்சன் நடையைக் கட்டினார். 33 பந்துகளை எதிர்கொண்டவர் 56 ரன்களை சேர்த்திருந்தார்.
இதையடுத்து களத்துக்கு வந்த ராகுல் திரிபாதி, அபிஷேக் ஷர்மா இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அபிஷேக் ஷர்மாவை பிராவோ வெளியேற்றினார். 50 பந்துகளில் 75 ரன்களை குவித்துவிட்டு அவர் பெவிலியன் திரும்பினார்.
இதையடுத்து, 17.4 வது ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றியைப் பதிவு செய்தது ஹைதராபாத். ராகுல் திரிபாதி 39 ரன்களுடனும், பூரன் 5 ரன்களுடனும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக களத்தில் இருந்தனர். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தரப்பில் மொயின் அலி 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
4-வது தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை அணி, புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT