Published : 08 Apr 2022 11:38 PM
Last Updated : 08 Apr 2022 11:38 PM
மும்பை: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. அந்த அணியின் ஓப்பன் சுப்மன் கில் ஐபிஎல் தொடரில் முதல் சதத்தை பதிவு செய்யும் வாய்ப்பை இழந்தார்.
190 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஒப்பனர்கள் சுப்மன் கில் மற்றும் மேத்யூ வேட் இணை 3 ஓவர் வரை மட்டுமே தாக்குப்பிடித்து. ரபடாவின் ஓவரில் 6 ரன்களே எடுத்த நிலையில் மேத்யூ வேட் முதல் விக்கெட்டாக நடையை கட்டினார். ஒன் டவுன் பேட்ஸ்மேனாக அறிமுக வீரர் சாய் சுதர்சன் இறங்கினார். அறிமுக ஆட்டத்துக்கு ஏற்ப சாய் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி சுப்மன் கில்லுக்கு நல்ல ஒத்துழைப்பை கொடுத்தார்.
இதனால் சுப்மன் கில் பஞ்சாப் பந்துவீச்சை பவுண்டரிகளாக விளாசினார். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்து 100 ரன்களுக்கு மேல் சென்றது. மூன்றாவது ஓவரில் இணைந்த இவர்கள் கூட்டணியை பஞ்சாப் பவுலர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் பார்ட்னர்ஷிப் மூலமாக 101 ரன்கள் சேர்த்தனர் கில்லும், சாய்யும். இறுதியில் 15வது ஓவரில் ராகுல் சஹார் தான் இந்த பார்ட்னர்ஷிப்பை பிரித்தார். 35 ரன்கள் எடுத்திருந்த சாய் சுதர்சன் மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பின் வந்த குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் சுப்மன் கில் உடன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு ஓவர்களில் வெற்றிக்கு 32 ரன்கள் தேவை என்ற நிலையில் ரபாடாவின் இறுதி ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார் ஹர்திக் பாண்டியா. அதற்கு அடுத்த பந்தை எதிர்கொண்ட சுப்மன் கில் ஐபிஎல் சீசனில் முதல் சதத்தை பதிவு செய்ய நான்கு ரன்கள் தேவைப்பட்டது. அப்போது புல்டாஸாக ரபாடா வீச, அதை தூக்கி அடிக்க முயன்று மயங்க் அகர்வாலிடம் கேட்ச் ஆனார் கில். இதனால் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியதுடன் கடைசி நேரத்தில் திடீர் பரப்பு ஏற்பட்டது.
6 பந்துகளில் 19 ரன்கள் என்ற நிலையில் கடைசி ஓவரின் முதல் பந்தையே ஓடியன் ஸ்மித் வொயிடாக வீசினார். அடுத்த பந்து டாட் பாலனாலும் அதில் டேவிட் மில்லர் ரன் எடுக்க முயல மறுபுறம் இருந்த ஹர்திக் பாண்டியா ரன் அவுட் செய்யப்பட்டார். அடுத்து களம் புகுந்த ராகுல் தெவட்டியா சிங்கிள் எடுக்க, இதற்கடுத்த இரண்டு பந்தில் ஒரு பவுண்டரி ஒரு சிங்கிள் எடுத்தார் மில்லர். இரண்டு பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட, 5வது பந்தில் சிக்ஸர் அடித்து அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வந்தார். கடைசி பந்தையும் சிக்ஸ் அடித்து மீண்டும் ராகுல் தெவட்டியா ஸ்டார் ஆனார். இதன்மூலம் குஜராத் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது. பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா இரண்டு விக்கெட்கள் எடுத்தார்.
பஞ்சாப் இன்னிங்ஸ்: டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பவுலிங்கை தேர்வுசெய்தார். அதன்படி பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால், ஷிகர் தவான் இணை துவக்கம் கொடுத்தது. ஆட்டம் தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே தனது முதல் விக்கெட்டை பறிகொடுத்தது பஞ்சாப் அணி. ஹர்திக் பாண்ட்யா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து 5 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார் மயங்க் அகர்வால்.
இதையடுத்து களத்துக்கு வந்த ஜானி பேர்ஸ்டோவ் ஷிகர் தவானுடன் கைகோர்த்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நிலைக்காமல் லாக்கி பெர்குசன் வீசிய 4வது ஓவரில் 8 ரன்களில் அவுட்டாகி மைதானத்திலிருந்து வெளியேறினார். லியாம் லிவிங்ஸ்டோன், ஷிகர் தவானுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 10 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை சேர்த்திருந்தது. 10 ஓவர் வரை தாக்குப்பிடித்த ஷிகர் தவான் 35 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷித் கான் வீசிய பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்ப ஜிதேஷ் ஷர்மா களமிறங்கினார். மறுபுறம் லியாம் லிவிங்ஸ்டோன் குஜராத் பவுலர்களுக்கு 4 சிக்ஸ்களை அடித்து வான வேடிக்கை காட்டினார். அதிரடியாக ஆடிய அவர் 21 பந்துகளில் 50 ரன்களை எட்டினார்.
அடுத்தடுத்து வந்த ஜிதேஷ் ஷர்மா, ஷாருக்கான், ரபாடா, வைபவ் அரோரா ஆகியோர் வருவதும் போவதுமாக இருந்தனர். இதனால் பஞ்சாப் அணியின் விக்கெட் சீட்டுக்கட்டைப்போல சரியத் தொடங்கியது. அதன்படி 20 ஓவர் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு பஞ்சாப் அணி 189 ரன்களை குவித்தது. அந்த அணி தரப்பில் 27 பந்துகளில் 67 ரன்களை எடுத்து லியாம் லிவிங்க்ஸ்டோன் அதிரடி காட்டினார். குஜராத் அணி தரப்பில் முஹம்மது சமி, ஹர்திக் பாண்ட்யா, லாக்கி பெர்குசன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், ரஷீத்கான் 3விக்கெட்டையும், தர்ஷன் நல்கன்டே 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT