Published : 06 Apr 2022 09:46 PM
Last Updated : 06 Apr 2022 09:46 PM
மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 161 ரன்களை குவித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 5 பந்துகள் மட்டுமே ஆடிய பொல்லார்டு 3 சிக்ஸ்ர்களை விளாசி அதிரடி காட்டினார்.
ஐபிஎல் ஆட்டத்தின் 14-வது லீக் போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இஷான் கிஷன், ரோஹித் சர்மா இணை துவக்கம் கொடுத்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடி வந்த இந்த இணையை 3-வது ஓவர் வீசிய உமேஷ் யாதவ் பிரித்தார். அவர் வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 3 ரன்களில் நடையைக் கட்டினார் ரோஹித் சர்மா.
அதன்பிறகு களத்துக்கு வந்த டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷனுடன் கைகோத்தார். ஆனால், டெவால்ட் ப்ரீவிஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வருண் சக்ரவர்த்தி வீசிய 8-வது ஓவரில் போல்டாகி 29 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஒருபக்கம் இஷான் கிஷன் மட்டும் போராடிக்கொண்டிருந்தார். ஆனால், அவரது போராட்டமும் ஒருகட்டத்தில் தோற்றுப்போக, பேட் கம்மின்ஸ் வீசிய 11-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி 14 ரன்களை மட்டுமே சேர்த்து மைதானத்திலிருந்து வெளியேறினார்.
சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா இணை அணியை சரிவிலிருந்து மீட்க போராடியது. இருவரும் இணைந்து 18 ஓவர் முடிவில் 129 ரன்களை சேர்த்தனர். அடுத்த ஓவரிலேயே சூர்யகுமார் யாதவ் 52 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, பொல்லார்டு வந்ததும் சிக்ஸ் அடித்து அதிரடி காட்டினார். 5 பந்துகள் மட்டுமே ஆடிய பொல்லார்டு 3 சிக்ஸர்கள் விளாசி மிரட்டி 22 ரன்களை சேர்த்தார். மறுபுறம் 27 பந்துகளை எதிர்கொண்ட திலக் வர்மா 38 ரன்களில் அவுட்டாகாமல் களத்தில் நின்றார்.
20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 161 ரன்களை சேர்த்தது. மும்பை அணி தரப்பில் உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும், பேட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT