Published : 06 Apr 2022 06:01 AM
Last Updated : 06 Apr 2022 06:01 AM

இறுதி ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியது எப்படி? - லக்னோ அணியின் அவேஷ் கான் உற்சாகம்

மும்பை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சன் ரைசர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த லக்னோ, 7 விக்கெட்கள் இழப்புக்கு 169 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் அந்த அணி 27 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து தவித்த நிலையில் கேப்டன் கே.எல்.ராகுல் 68 ரன்களும், தீபக் ஹூடா 51 ரன்களும் விளாசி வலுவான ஸ்கோரை குவிக்க உதவினர்.

170 ரன்கள் இலக்கை துரத்திய ஹைதராபாத் அணியால் 9 விக்கெட்கள் இழப்புக்கு 157 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணிக்கு கடைசி 3 ஓவர்களில் 33 ரன்கள் தேவையாக இருந்தது. கைவசம் 6 விக்கெட்கள் இருந்த நிலையில் ஹைதராபாத் எளிதாக வெற்றி பெறும் என்றே கூறப்பட்டது. ஆனால்18-வது ஓவரை வீசிய அவேஷ் கான் அடுத்தடுத்த பந்துகளில் நிக்கோலஸ் பூரன் (34), அப்துல் சமத் (0) ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்ததுடன் 7 ரன்கள் மட்டுமே வழங்கி போட்டியை லக்னோ அணியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார்.

முன்னதாக, பவர் பிளேவில் கேன் வில்லியம்சன் (16), அபிஷேக் சர்மா (13) ஆகியோரையும் அவேஷ் கான் ஆட்டமிழக்கச் செய்திருந்தார். ஓட்டுமொத்தமாக 4 ஓவர்களை வீசிய அவேஷ் கான் 24 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார். ஆட்ட நாயகன் விருது வென்ற அவேஷ் கான்கூறும்போது, ‘‘அணிக்காக விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதே முயற்சியாக இருந்தது. ஏனென்றால் அணி, இதைத்தான் என்னிடம் இருந்து விரும்புகிறது. பவர் பிளே மற்றும் இறுதிக்கட்ட ஓவர்களில் விக்கெட் வீழ்த்த விரும்பினேன்.

வேகத்தை குறைத்து பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன். முதல் இன்னிங்ஸில் வேகம் குறைத்து வீசப்பட்டபந்துகள் நன்றாக வேலை செய்வதை நான் கவனித்தேன், அதனால் பவர் பிளேயில் ஒரு மாறுபாடாக அதைச் செய்யநினைத்தேன். மேலும் டாட் பந்துகள் வீச வேண்டும் என்பதை கருத்தில்கொண்டே யார்க்கர்களை பயன்படுத்தினேன். கவுதம் காம்பீர், ஆண்டி பிச்செல், ஆண்டி ஃப்ளவர் ஆகியோரை உள்ளடக்கிய லக்னோ அணியின் அமைப்பு சிறப்பாக உள்ளது. அவர்கள் என்னை எனது பலத்திற்கு ஏற்றவாறு பந்து வீசச் சொல்கிறார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x