Published : 02 Apr 2022 08:37 PM
Last Updated : 02 Apr 2022 08:37 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. அடுத்தடுத்து வெற்றிகளுடன் மாஸ் காட்டும் அந்த அணி, மும்பைக்கு எதிரான போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சீசனில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் அனைவரும் பந்து வீசவே முடிவு செய்துள்ளனர். ஆனால், இரண்டு போட்டிகள் விளையாடியும் டாஸ் வெல்லாத ராஜஸ்தான் அணி வெற்றிநடை போட்டு வருகிறது.
முதல் போட்டியில் 210 ரன்கள், இரண்டாவது போட்டியில் 193 ரன்களை சேர்த்த அந்த அணி, எதிரணி பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தி உள்ளது. இதற்கு காரணம் அந்த அணி பேட்டிங், பவுலிங் என சிறப்பான வீரர்கள் அடங்கிய பிளேயிங் லெவனை ராஜஸ்தான் தெரிவு செய்தததுதான்.
மும்பை அணிக்கு எதிரான இன்று நடைபெற்ற போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில், 193 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்காக இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ரோகித் ஷர்மா களம் இறங்கினர். ரோகித் 10 ரன்கள் எடுத்து பிரசித் கிருஷ்ணாவின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து வந்த அன்மோல்ப்ரீத் சிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார். பின்னர் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா இணையர் 81 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கிஷன் 54 ரன்கள் எடுத்து அவுட்டானார். திலக் வர்மா, 33 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்து அசத்தினார்.
தொடர்ந்து கிரீஸுக்கு வந்த மும்பை பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஷ்வின், பொல்லார்ட் ஆகியோர் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் 170 ரன்களை எடுத்தது மும்பை.
வழக்கமாக மும்பை அணி கடைசி 5 ஓவர்களில் தான் அதிரடியாக ரன்களை குவிக்கும். ஆனால், இந்தப் போட்டியில் அது மிஸ் ஆகியுள்ளது. சூர்யகுமார் யாதவ் வருகையை எதிர்பார்த்துள்ளது. விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த சீசனில் இதுவரை மும்பை அணிக்காக விளையாடவில்லை.
இன்றைய போட்டியில் பட்லர் விளாசிய அசத்தல் சதத்தின் துணையுடன், மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் 193 ரன்கள் குவித்தது.
டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங் தேர்வு செய்தார்.
ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணிக்காக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஜாஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜெய்ஸ்வால் 1 ரன் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு வந்த தேவ்தத் படிக்கல் 7 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
பின்னர் வந்த அந்த அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் உடன் இணைந்து 82 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர். தொடர்ந்து ஹெட்மயர் உடன் 53 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் பட்லர். அதோடு இந்த சீசனில் முதல் சதத்தை பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். 66 பந்துகளில் இந்த சதத்தை அவர் பதிவு செய்தார் பட்லர். ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்துள்ள இரண்டாவது சதம் இது.
20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. மும்பை அணி இந்த ஆட்டத்தில் வெற்றி பெற 194 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மும்பை அணிக்காக ஜஸ்ப்ரீத் பும்ரா 4 ஓவர்கள் வீசி 3 விக்கெட்கள் கைப்பற்றி 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்திருந்தார்.
முன்னதாக, ஹைதராபாத் அணிக்கு எதிராக ராஜ்ஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த சீசனில் ராஜஸ்தான் நீங்கலாக முதலில் பேட் செய்துள்ள அணிகள் அனைத்தும் போட்டியில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கூட முதல் இரண்டு போட்டிகளிலும் முதலில் பேட் செய்து ஆட்டத்தை இழந்துள்ளது.
ராஜஸ்தான் அணியில் போல்ட், பிரசித் கிருஷ்ணா, அஷ்வின், சாஹல் என தரமான பந்துவீச்சாளர்கள் உள்ளனர். பேட்டிங்கிலும் அந்த அணி பேலன்ஸ்டு சைடாகவே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT