Published : 04 Jun 2014 10:00 AM
Last Updated : 04 Jun 2014 10:00 AM
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான செரினா வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்த ஸ்பெயினின் இளம் வீராங்கனை கார்பின் முகுருசா, காலிறுதி ஆட்டத்தில் ஷரபோவாவிடம் தோல்வியடைந்தார்.
முகுருசாவை வென்றதன் மூலம் ரஷ்யாவின் ஷரபோவா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் 20 வயது இளம் வீராங்கனையான முகுருசாவை ஷரபோவா எதிர்கொண்டார்.
செரினாவுக்கு அதிர்ச்சி
முகுருசா தனது 2-வது சுற்று ஆட்டத்தில் 6-2,6-2 என்ற கணக்கில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி தோல்வியை அளித்தார். எனவே முகுருசா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஷரபோவாவுக்கு அவர் கடும் சவாலாக இருப்பார் என்பது உறுதியானது.
காலிறுதி ஆட்டத்தில் முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றி ஷரபோவாவுக்கு அதிர்ச்சி அளித்தார் முகுருசா. 2-வது செட்டிலும் ஷரபோவாவுக்கு அவர் கடும் நெருக்கடி அளித்தார். கடுமையாகப் போராடிய ஷரபோவா இறுதியில் 7-5 என்ற கணக்கில் அந்த செட்டை தன் வசமாக்கினார்.
மூன்றாவது செட்டில் முகுருசாவால் சிறப்பாக விளையாட முடியவில்லை. அதே நேரத்தில் ஷரபோவா ஆக்ரோஷமாக விளையாடினார். இறுதியில் 6-1 என்ற கணக்கில் ஷரபோவா 3-வது செட்டை கைபற்றினார். இதன் மூலம் 1-6, 7-5,6-1 என்ற கணக்கில் ஷரபோவா வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
2012-ம் ஆண்டில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஷரபோவா சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஆண்டு இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.
சானியா ஜோடி தோல்விபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் மகளிர் இரட்டையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியது.
நேற்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சானியா ஜோடி சீனாவின் சுகாய் பெங், சீன தைபெயின் சு விய் குசேய் ஜோடியை எதிர்கொண்டது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் சீன ஜோடி வென்றது. முதல் செட்டை சில நிமிடங்களிலேயே சானியா ஜோடி இழந்தது. இதையடுத்து இரண்டாவது செட்டில் சானியா – காரா ஜோடி சுதாரித்து விளையாடியது. இதனால் அந்த செட் 6-3 என்ற கணக்கில் சானியா ஜோடியின் வசமானது.
இதையடுத்து நடைபெற்ற 3-வது செட்டில் சீன இணை சானியா – காராவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் வகையில் விளையாடியது.
அவர்களது சிறப்பான ஆட்டத்துக்கு இணையாக சானியா ஜோடியால் விளையாட முடியவில்லை. இறுதியில் 3-6 என்ற கணக்கில் அந்த செட்டை சானியா ஜோடி இழந்து போட்டியில் தோல்வியடைந்தது. இந்த போட்டி சுமார் 2 மணி நேரம் நீடித்தது.
காலிறுதியில் நடால், முர்ரே
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு நடப்பு சாம்பியனான ஸ்பெயின் ரபேல் நடால், டேவிட் பெரர் ஆகியோர் முன்னேறியுள்ளனர். பிரெஞ்சு ஓபனில் 8 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நடால், இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்றால் தொடர்ந்து 5-வது முறையாக பிரெஞ்சு ஓபன் சாம்பியன் ஆனவர் என்ற சாதனையைப் படைப்பார்.
4-வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் டஸ்டன் லாஜோவிக்கை நடால் எதிர்கொண்டார். இதில் 6-1,6-2,6-1 என்ற செட் கணக்கில் மிக எளிதாக நடால் வெற்றியைத் தனதாக்கினார். நடாலின் சர்வீஸ்களில் வெறும் 15 புள்ளிகளை மட்டுமே டஸ்டன் பெற முடிந்தது. இந்த வெற்றி மூலம் பிரெஞ்சு ஓபனில் 63-வது வெற்றியை நடால் பதிவு செய்தார். ஒருமுறை மட்டுமே இங்கு தோல்வியடைந்துள்ளார்.
ஸ்பெயினைச் சேர்ந்த மற்றொரு வீரர் டேவிட் பெரர் தனது 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஆண்டர்சனை வென்று காலிறுதிக்கு தகுதி பெற்றார். இதன் மூலம் தொடர்ந்து 10-வது முறையாக அவர் கிராண்ட்ஸ்லாம் போட்டி காலிறுதிக்கு வந்துள்ளார். பிரிட்டனின் ஆண்டி முர்ரே, பிரான்ஸ் வீரர் மோன்பில்ஸ் ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஆண்டிரியா பெட்கோவிக், ருமேனியாவின் சிமோனா ஹெலிப், இத்தாலியின் சாரா எர்ரானி, ரஷ்யாவின் குஷ்னெட்சோவா ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT