Published : 27 Mar 2022 05:31 AM
Last Updated : 27 Mar 2022 05:31 AM
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் நேற்று தொடங்கியது. இந்த சீசனில் லக்னோ, குஜராத் ஆகிய இரு அணிகளுடன் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டுள்ளன. லீக் சுற்றின் 70 ஆட்டங்களும் மகாராஷ்டிராவில் நடத்தப்பட உள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் சென்னை - கொல்கத்தா அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பீல்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியை ரவீந்திர ஜடேஜா கேப்டனாக வழிநடத்தினார்.
இதன் மூலம் அதிக ஆட்டங்களில் (200) விளையாடிய பின்னர் கேப்டனாக களமிறங்கிய வீரர் என்ற பெருமையை பெற்றார் ஜடேஜா. இதற்கு முன்னர் மணீஷ்பாண்டே 153 ஆட்டங்களில் விளையாடிய பின்னர் கேப்டனாக செயல்பட்டிருந்தார். முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் 0, டேவான் கான்வே 3 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினர். ராபின் உத்தப்பா 21 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்னில் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தார். அம்பதி ராயுடு 15 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷிவம் துபே 3 ரன்னில் நடையை கட்டினார். இறுதிக்கட்டத்தில் தோனி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் விளாசினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் ஜடேஜா 28 பந்துகளில், 26 ரன்கள் சேர்த்தார்.
இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 70 ரன்கள் சேர்த்தது. அதிலும் கடைசி3 ஓவர்களில் 47 ரன்களை விளாசியிருந் தனர். வருண் சக்கரவர்த்தி, சுனில் நரேன் ஆகியோரது பந்து வீச்சில் தோனி ரன்கள் சேர்க்க திணறினார். 17 ஓவர்களில் 84 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆந்த்ரே ரஸ்ஸல், ஷிவம் மாவி வீசிய ஓவர்களில் தோனி மட்டையை சுழற்றி அசத்தினார்.
132 ரன்கள் இலக்குடன் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 18.3 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்து 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அஜிங்க்ய ரஹானே 34 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், வெங்கடேஷ் ஐயர் 16, நிதிஷ் ராணா 21, ஷேம் பில்லிங்ஸ் 25 ரன்களும் சேர்த்து ஆட்டமிழந்தனர். ஸ்ரேயஸ் ஐயர் 20, ஷெல்டன் ஜாக்சன் 3 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
பாராட்டு விழா....
போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்திய வீரர்களை பிசிசிஐ கவுரவித்தது. நிகழ்ச்சியில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை பிசிசிஐ தலைவர் கங்கலி வழங்கினார். மேலும் வெண்கலப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைனுக்கு ரூ.25 லட்சமும், வெண்கலப் பதக்கம் வென்றிருந்த ஆடவர் ஹாக்கி அணிக்கு ரூ.1 கோடியும் வழங்கப்பட்டது.
இன்றைய ஆட்டம்
மும்பை - டெல்லி
நேரம் : பிற்பகல் 3.30
பஞ்சாப் - பெங்களூரு
நேரம் : இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT