Published : 26 Mar 2022 09:23 PM
Last Updated : 26 Mar 2022 09:23 PM
மும்பை: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் முதல் இன்னிங்சில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 131 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் 15வது சீசனின் முதல் போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு வருகிறது. இரு அணிகளுமே புதிய கேப்டன்கள் தலைமையில் களமிறங்குவதால் எதிர்பார்ப்புக்குரிய ஒன்றாக இருந்தது. அதன்படி, டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.
சென்னை அணியின் ஓப்பனிங் வீரர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே களமிறங்கினார். முதல் ஓவரை வீசிய உமேஷ் யாதவ் சென்னை அணிக்கும், ரசிகர்களுக்கும் அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்தார். மூன்றாவது பந்திலேயே ருதுராஜ்ஜை ரன்கள் ஏதும் எடுக்காத நிலையில் வெற்றியேற்றிய உமேஷ், தனது அடுத்த ஓவரில் மூன்றே ரன்களை எடுத்திருந்த கான்வேவையும் அவுட் ஆக்கி சென்னை அணியின் சரிவை தொடங்கி வைத்தார்.
இதன்பின் வந்த உத்தப்பா தலா இரண்டு பவுண்டரி, சிக்ஸர் என அதிரடியாக ஆரம்பித்தாலும் அவரும் 28 ரன்களுக்கு நடையை கட்டினார். அம்பதி ராயுடு 17 ரன்களுக்கும், ஷிவம் துபே 3 ரன்களுக்கும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுக்க, ஆட்டம் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் பக்கம் சாய்ந்தது. அடுத்தடுத்த ஓவர்களில் அந்த அணி பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தி ரன்களை கட்டுப்படுத்தினர். 16 ஓவர்களில் சென்னை அணி 70 ரன்களை தொட முடியவில்லை. 19வது ஓவரின் பாதியில் தான் 100 ரன்களை தொட்டது.
அதுவும், முன்னாள், இந்நாள் கேப்டன்கள் தோனி மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து ஓரளவு விளையாடியதால் இந்த அளவு ஸ்கோரை எடுக்க முடிந்தது. தோனி அடுத்தடுத்து சில பவுண்டரிகளை விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்தியதுடன் அரைசதமும் கடந்தார். அவரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்து விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. தோனி 50 ரன்களுடனும், ஜடேஜா 26 ரன்களுடனும் நாட் அவுட் பேட்ஸ்மேன்களாக இருந்தனர்.
ரிசல்ட்டை தெரிந்துகொள்ள > IPL 2022 | ரஹானேவின் பொறுப்பான ஆட்டம் - சிஎஸ்கே அணியை வீழ்த்திய கேகேஆர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT