Published : 30 Apr 2016 02:56 PM
Last Updated : 30 Apr 2016 02:56 PM

எந்த ஒரு பந்துவீச்சுச் சேர்க்கையும் எடுபடவில்லை: தோனி ஏமாற்றம்

புனேயில் நடைபெற்ற 25-வது ஐபிஎல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றதையடுத்து 7 போட்டிகளில் 5-வது தோல்வியைச் சந்தித்தது தோனியின் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

ஜெயண்ட்சை வீழ்த்திய லயன்ஸ்:

டாஸ் வென்ற குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா முதலில் புனே அணியை பேட் செய்ய அழைத்தார். அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித் 54 பந்துகளில் 8 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி, 101 ரன்கள் எடுத்து சதம் கண்டார். புனே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய குஜராத் லயன்ஸ் அணி டிவைன் ஸ்மித் (63), மெக்கல்லம் (43) ஆகியோர் மூலம் 8 ஓவர்களில் 93 ரன்கள் என்ற அதிரடி தொடக்கம் கண்டது. ரெய்னா, தினேஷ் கார்த்திக் பங்களிப்புடன் கடைசி பந்தில் வெற்றி ரன்னை எட்டி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 196 ரன்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக டிவைன் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உண்மையில் கடைசி பந்து வரை ஆட்டம் சென்றிருக்க வேண்டியதில்லை. குஜராத் லயன்ஸ் வீரர்களின் தவறான ஷார்ட் தேர்வும், சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பீல்டிங்கும் கடைசி பந்து வரை செல்லும் த்ரில்லராக மாற்றியது.

புனே அணியின் ஸ்மித்தின் 54 பந்து சதத்தை மெக்கல்லம், டிவைன் ஸ்மித் இன்னிங்ஸ் பின்னுக்குத் தள்ளியது. இருவரும் 8 ஓவர்களில் 93 ரன்கள் சேர்க்க, ரெய்னா (34), கார்த்திக் ( 33) ஆகியோர் பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தினர். ஆனால் கார்த்திக் அவுட் ஆனவுடன் 22 பந்துகளில் 30 ரன்கள் என்ற இலக்கு சற்றே திணறல் கண்டது, காரணம் லெக்ஸ்பின்னர் முருகன் அஸ்வின் 18-வது ஓவரில் 4 ரன்களையே விட்டுக் கொடுத்தார்.

மேலும் டிவைன் பிராவோ, ஜடேஜா ஆகியோர் அடுத்தடுத்து பெவிலியன் திரும்ப ஆட்டம் த்ரில் முடிவை நோக்கி நகர்ந்தது. கடைசி ஓவரில் 8 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் தோனி திசர பெரேராவிடம் பந்தை அளித்தார். முதல் பந்து தாழ்வான புல்டாஸாக அதனை லெக் திசையில் முறையாக பவுண்டரிக்கு அனுப்பி வைத்தார் பாக்னர். 2-வது பந்து ஆஃப் திசையில் வைடால் ஒரு ரன். மீண்டும் 2வது பந்தில் 1 ரன் எடுத்தார் பாக்னர். அடுத்த பந்தில் சுரேஷ் ரெய்னா ஆளில்லாத ஸ்கொயர் லெக் திசையை குறிவைத்தார் ஆனால் பந்து சரியாகச் சிக்காமல் பவுல்டு ஆனார். அதற்கு அடுத்த பந்தில் இசாந்த் கிஷன் திவாரியின் நேரடி த்ரோவுக்கு ரன் அவுட் ஆனார். ஆட்டம் டென்ஷன் ஆனது.

5-வது பந்தை பாக்னர் லெக் திசையில் ஒதுங்கியபடியே மேலேறி வந்து லாங் ஆஃபில் ஆடி 2 ரன்களுக்கு ஓடினர், ரன்னர் முனையில் பிரவீன் குமார் மெதுவாக ஓடி வந்தார், ஆனால் ரஹானேயின் த்ரோ சரியாக அமையவில்லை. த்ரோவை ரன்னர் முனைக்கு அடித்திருக்க வேண்டும் என்று ரஹானேயிடம் தோனி அறிவுறுத்தினார்.கடைசி பந்து ஷார்ட் பிட்சாக அமைய பாக்னர் அதனை காற்றில் ஷார்ட் மிட் ஆனைத் தாண்டி அடித்தார் ஒரு ரன், ஆனால் ஸ்டீவ் ஸ்மித் டைவ் அடித்தார் பலனளிக்கவில்லை, பாக்னர் தனது பிறந்தநாளில் வெற்றி தேடித் தந்தார்.

196 ரன்களை குஜராத் லயன்ஸ் எடுத்து வென்றாலும் இதில் 3 சிக்சர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. மெக்கல்லம் 2, ஸ்மித் 1. ஆனால் 22 பவுண்டரிகளை குஜராத் லயன்ஸ் அடித்தது. மொத்தம் 106 ரன்கள்தான் பவுண்டரிகளில் வந்துள்ளது மீது 90 ரன்கள் ஓடி எடுக்கப்பட்டதாகும். புனே அணியில் ஒருவரும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வீசவில்லை, முருகன் அஸ்வின் 3 ஓவர்களில் 22 ரன்களுடன் 7.33 என்ற குறைந்த சிக்கனவிகிதம் காட்டினார். மோர்கெல், டிண்டா, பெரேரா, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் பந்து வீச்சு எடுபடவில்லை.

தோல்வி குறித்து தோனி கூறியது:

முதல் 6 ஓவர்களில் 60 ரன்கள் விட்டுக் கொடுத்தோம், அதன் பிறகே நெருக்கடி அதிகரித்தது. நிச்சயமாக நாங்கள் புதிய பந்தில் பந்துவீச்சை மேம்படுத்தியே ஆக வேண்டும். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை திட்டமிட வேண்டும். இல்லையெனில் அடித்து நொறுக்கப்படுவது உறுதி. அணியில் காயம் என்பது நம் கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்று எனவே அதைப்பற்றி பேசிப் பயனில்லை.

பேட்டிங்கை விட பவுலிங்கில்தான் திணறி வருகிறோம் என்பது உறுதி. 5 பவுலர்கள் சேர்க்கை, 6 பவுலர்கள் சேர்க்கை என்று மாற்றி மாற்றி விளையாடிப் பார்த்தோம் எங்களுக்கு எதுவும் பயனளிக்கவில்லை.

போட்டிகளுக்கு இடையே அதிக இடைவெளிகளை விரும்புகிறேன். பல விஷயங்களை சரி செய்ய வேண்டியுள்ளது, இல்லையெனில் தோல்வியிலிருந்து தப்ப முடியாது என்பது உறுதி, என்றார் தோனி.

தோனியை ஏமாற்றமடைந்திருப்பார்: ரெய்னா

நெருக்கமான வெற்றி. முதல் 6 ஓவர்களில் மெக்கல்லம், டிவைன் ஸ்மித் துவம்சம் செய்தனர். இலக்கு என்னவென்று தெரியும் போது முதல் 6 ஓவர்களில் ஆக்ரோஷமாக ஆட முடியும். பாக்னருக்கு இன்று ஒரு நல்ல பிறந்த நாள். கேப்டன்சியும் நன்றாக இருப்பதாகவே கருதுகிறேன். தோனியிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இன்று இரவு நான் தோனியை சந்திக்கப்போவதில்லை அவர் மிகுந்த ஏமாற்றத்தில் இருப்பார். அவரை மற்றொரு நாள் சந்திப்பேன், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x