Published : 22 Mar 2022 09:48 PM
Last Updated : 22 Mar 2022 09:48 PM
மும்பை: வர்ணனையாளராக மீண்டும் களமிறங்கியுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி பிசிசிஐ விதிகளை கடுமையாகச் சாடியுள்ளார்.
ரவி சாஸ்திரி, இந்த தலைமுறையினருக்கு ஒரு கிரிக்கெட்டர் என்பதை விட வர்ணனையாளராகவே நிறைய அறிமுகம். இந்தியா வென்ற டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிகளில் இவரின் வர்ணனை ஆட்டத்தை பார்ப்பவர்கள் மத்தியில் மேலும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆன பின்பு வர்ணனை செய்ய முடியாத அவர், வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் மீண்டும் வர்ணனையாளராக களமிறங்கவுள்ளார்.
இதுதொடர்பாக பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, "இது ஐபிஎல்லின் 15வது சீசன். இதில், முதல் 11 ஆண்டுகள் நான் வர்ணனை செய்தேன். ஆனால் சில முட்டாள்தனமான விதிகளால் கடந்த சில சீசன்களாக அதை என்னால் தொடர முடியவில்லை" என்று பிசிசிஐ விதிகளை மறைமுகமாக சாடினார்.
ரவி சாஸ்திரியுடன் சேர்ந்து, சுரேஷ் ரெய்னாவும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வர்ணனை குழுவில் இடம்பிடித்துள்ளார். சுரேஷ் ரெய்னாவை வர்ணனை குழுவுக்கு வரவேற்று பேசிய ரவி சாஸ்திரி, "ரெய்னாவை மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கிறார்கள். உண்மை தான் அதை மறுக்க முடியாது. ஒரே அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவது பெரிய விஷயம். அதற்கு எனது பாராட்டுக்கள். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் பெற்றவர்களில் ரெய்னாவும் ஒருவர். ஐபிஎல்லை பிரபலப்படுத்தியவர்களில் அவருக்கும் இடமுண்டு" என்றார்.
தொடர்ந்து பேசிய ரவி, "இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டனாக பல வீரர்கள் தங்களைக் கண்டறிய ஐபிஎல் ஒரு வாய்ப்பாக உள்ளது. விராட் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். ரோஹித் வொயிட் பால் கிரிக்கெட்டில் ஒரு சிறந்த கேப்டன். அதேநேரம் இந்தியாவின் வருங்காலக் கேப்டனாகும் வாய்ப்பு ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கேஎல் ராகுல் ஆகியோரில் யாருக்கு இருக்கிறது என்பதை இந்த ஐபிஎல் தொடரில் காணலாம்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT