Published : 29 Apr 2016 08:01 PM
Last Updated : 29 Apr 2016 08:01 PM
வங்கதேசத்துக்காக 38 டெஸ்ட், 51 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள வேகப்பந்து வீச்சாளர் ஷஹாதத் ஹுசைன் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்நோக்கும் வேளையில் தன் தவறுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
மஹ்புசா அக்தர் என்ற 11 வயது சிறுமி வங்கதேச கிரிக்கெட் வீரர் ஷஹாதத் ஹுசைன் வீட்டில் பணிப்பெண்ணாக இருந்து வந்தார், இந்நிலையில் கடந்த ஆண்டு காலுடைந்த நிலையில், உடலில் சுட்ட தீக்காயங்களுடன் தெருவிலிருந்து மீட்டெடுக்கப்பட்டார்.
பின்னர் போலீஸ் புகார் அளித்த இந்தச் சிறுமி, 2 ஆண்டுகாலம் இவர்கள் வீட்டில் பணியாற்றியதையும் தொடர்ந்து ஷஹாதத் ஹுசைன் மற்றும் இவரது மனைவி ஜாஸ்மின் ஜஹான் நிரித்தோ ஷஹாதத் ஆகிய இருவரும் சிறுமியை கடுமையாக துன்புறுத்தியதாகத் தெரிவித்ததையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பிறகு அக்டோபரில் போலீஸிடம் சரணடைந்தார் ஷஹாதத் ஹுசைன் 2 மாத காலம் சிறையில் கழித்து ஜாமீனில் வெளியே வந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சிறுமியை துன்புறுத்தியதற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொண்டு வருகிறார்.
இது குறித்து வங்காள மொழியில் அவர் தெரிவித்ததாவது:
நான் ஈடுபட்ட அந்த விரும்பத்தகாத செயலுக்காக வருந்துகிறேன், இதற்காக ஒட்டுமொத்த தேசத்திடமும் மன்னிப்பு கேட்கிறேன். என்னுடைய கிரிக்கெட் மற்றும் வாழ்வாதாரத்துக்காக நான் இந்த நாட்டினரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன், என்னுடைய தவறைத் திருத்திக் கொள்வதற்கும் மீண்டும் கிரிக்கெட் ஆடுவதற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். நான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
என்று கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT