Published : 16 Mar 2022 05:39 PM
Last Updated : 16 Mar 2022 05:39 PM
மும்பை: பயோ பபுள் பாதுகாப்பு நெறிமுறைகளில் புதிய மாற்றங்களை செய்துள்ள பிசிசிஐ, வரவிருக்கும் சீசனில் அதைத் தீவிரமாக அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதனால், வீரர்களுக்கு சில புதிய எச்சரிக்கை அறிவிப்புக்கள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாட்களே உள்ளன. இதையடுத்தது வீரர்கள் அனைவரும் பயோ பபுள் பாதுகாப்பில் வீரர்கள் அனைவரும் வந்துள்ளனர். இதனிடையே, இந்த சீசனில் பயோ பபுள் கொள்கையில் பெரிய மாற்றங்களைச் செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. கடந்த சீசனில் பல வீரர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தொடர் பாதியிலேயே கைவிடப்பட்டு, பின்பு சில மாதங்கள் கழித்து துபாயில் மீண்டும் நடத்தப்பட்டது. இதனால், இந்தமுறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக விதிகளை கடுமையாக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.
அதன்படி, வரவிருக்கும் சீசனில் வீரர்கள் மட்டுமல்ல, அணிகளின் அதிகாரிகள் உட்பட யாரேனும் பயோ பபுள் பாதுகாப்பு நெறிமுறைகளை மீறினால் ரூ.1 கோடி அபராதம் முதல் பல்வேறு விளைவுகளை சந்திக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும், வீரர் முதல்முறையாக விதியை மீறும்போது தனிமைப்படுத்தப்படுவதோடு அவர் விளையாடாமல் இருக்கும் போட்டிக்கான ஊதியம் கொடுக்கப்பட மாட்டாது.
அதேநேரம், வீரர் இரண்டாவது முறையாக விதியை மீறினால் குவாரன்டைன் முடிந்தபிறகு ஊதியம் இல்லாமல், அந்த வீரர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படுவார். மூன்றாவது முறையாக விதியை மீறினால் அந்த வீரர் இந்த சீசன் முழுவதும் ஒப்பந்தம் செய்யப்பட்ட அணியில் இருந்தே நீக்கப்படுவார். மேலும், அவருக்குப் பதிலாக மாற்று வீரரும் இடம்பெற மாட்டார்" என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அணிகளின் நிர்வாகத்தில் இடம்பெற்றுள்ளவர்களுக்கும் பிசிசிஐ சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT