Published : 12 Apr 2016 05:34 PM
Last Updated : 12 Apr 2016 05:34 PM
இருதயக் கோளாறுகள் காரணமாக இங்கிலாந்து பேட்ஸ்மென், நாட்டிங்கம்ஷயர் வீரர் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற நேரிட்டுள்ளது.
இருதயத்தின் வலது அறையில் தசை சுருங்கி விரிவதில் இவருக்கு தீவிர பிரச்சினைகள் இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரிய வந்தது. இருதய தசை சுருங்கி விரிவதில் பிரச்சினைகள் இருந்தால் அது மாரடைப்பில் போய் முடியும். இந்நிலையில் அவர் ஓய்வு அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 2012-ல் கால்பந்து வீரர் பாப்ரிஸ் மும்பா இதே காரணத்தினால்தான் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ஜேம்ஸ் டெய்லருக்கு இதற்கான அறுவை சிகிச்சை விரைவில் நடைபெறவுள்ளது. ஜேம்ஸ் டெய்லர் தற்போது நாட்டிங்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு வியாழன் அல்லது வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜேம்ஸ் டெய்லரின் இந்த நிலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2011-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜேம்ஸ் டெய்லர் 2012-ல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடினார். பிறகு இங்கிலாந்து அணியில் நிரந்தர இடம்பிடிக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
மொத்தம் 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஜேம்ஸ் டெய்லர் கடந்த ஜனவரியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-1 என்று இங்கிலாந்து வெற்றி பெற்ற அணியில் செஞ்சூரியன் டெஸ்ட் போட்டியில் ஆடினார். 27 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ஜேம்ஸ் டெய்லர், 2015 உலகக்கோப்பையில் ஆடியதும் குறிப்பிடத்தக்கது. இவர் அடித்த ஒரே சதம் 2015-ம் ஆண்டு ஓல்ட் டிராபர்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது.
முதல் தர கிரிக்கெட்டில் 139 போட்டிகளில் 9,306 ரன்களை 20 சதங்கள், 47 அரைசதங்களுடன் எடுத்துள்ளார், கவுண்டி கிரிக்கெட்டில் இவரது அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர் 291 ஆகும்.
இந்நிலையில் ஜேம்ஸ் டெய்லர் தனது 26-வது வயதில் இருதயக் கோளாறு காரணமாக ஓய்வு பெற்றுள்ளார். தனது இந்த முடிவை ட்விட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ளார். இதில் நிச்சயம் தான் போராடி மீண்டும் வருவேன் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT