Published : 06 Jun 2014 12:00 AM
Last Updated : 06 Jun 2014 12:00 AM

குறை கூறுபவர்களும், தோழிகளும் ஒன்றுதான்: ரோஹித் சர்மா சுவாரஸ்யமான ஒப்பீடு

நம்மை குறை சொல்பவர்களும், பெண் தோழிகளும் ஒன்றுதான். இருவருமே நம்மைப்பற்றி சிந்திப்பதை நிறுத்தமாட்டார்கள் என்று மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

ஐபிஎல் போட்டியில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இண்டியன்ஸ் அணி இந்த ஆண்டு மிகவும் மோசமாக விளையாடியது. இருந்தபோதிலும் கடைசி கட்டத்தில் சிறப்பாக விளையாடி பிளேஆப் வரை முன்னேறியது. அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தபோது கடுமையான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் சந்திக்க வேண்டி இருந்தது குறித்து அவர் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி:

கடந்த முறை நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அப்போதும் சிலர் குறை கூறினர். இந்த முறை எங்கள் ஆட்டம் சற்று மோசமாகவே இருந்தது. இப்போதும் அதிக விமர்சனங்கள் இருந்தன. நாம் எதைச் செய்தாலும் அதனை விமர்சிப்பவர்களும், குறைகூறுபவர்களும் எப்போதும் இருந்து கொண்டேதான் இருப்பார்கள்.

அவர்கள் நமது பெண் தோழிகளைப் போன்றவர்கள். எப்போதும் நம்மைப் பற்றிதான் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். என்னை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதைத்தான் எனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நான் கட்டுப்படுத்த முடியாது.

இங்கிலாந்து தொடரில் எப்படி விளையாடுவது என்பது குறித்து இப்போது தீவிரமாக யோசித்து வருகிறேன். இங்கிலாந்து – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடரை டி.வி.யில் பார்த்து வருகிறேன். இதன் மூலம் இங்கிலாந்து அணியின் விளையாட்டு முறை குறித்து சில கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றார் ரோஹித் சர்மா.

பேட்டிங் முறையில் ஏதாவது மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளீர்களா என்ற கேள்விக்கு, இங்கிலாந்து வீரர்களின் பந்து வீச்சு முறையை கவனித்து வருகிறேன். ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்துகளை ஸ்விங் செய்கிறார். எனவே பந்தை சற்று முன்னதாகவே வந்து எதிர்கொண்டால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். நிலைமைக்கு ஏற்ப பந்துகளை எதிர்கொள்ளும் முறையை மாற்றினால் அதிக ரன்களை எடுக்க முடியும். இது தொடர்பாக அதிகம் கூற முடியாது என்றார் ரோஹித் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x