Published : 12 Mar 2022 06:38 PM
Last Updated : 12 Mar 2022 06:38 PM
பெங்களூரு: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஃபாஃப் டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் லீக் ஆட்டங்கள் வரவிருக்கும் 26-ம் தேதி தொடங்கவுள்ளது. தொடர் முழுமையாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற உள்ளன. இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர் முடிந்த பின் வீரர்கள் அனைவரும் பயோ பப்புள் சூழலுக்கு வரவிருக்கிறார்கள். சமீபத்தில், வீரரர்களின் ஏலம் முடிந்தது. அந்த ஏலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஃபாஃப் டு பிளெசிஸை ரூ.7 கோடிக்கு வாங்கியது. இவர் தற்போது அந்த அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த சீசன் வரை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி அனைத்து பார்மெட்களிலும் கேப்டன் பொறுப்பை துறந்த நிலையில் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட், கெவின் பீட்டர்சன், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி, கோலி மற்றும் ஷேன் வாட்சன் வரிசையில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் ஏழாவது கேப்டனாக ஆகியுள்ளார் டு பிளெசிஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா அணியை வழிநடத்தி இருந்தாலும், ஐபிஎல்லை பொறுத்தவரை டு பிளெசிஸின் முதல் கேப்டன் பதவி இதுவே. டு பிளெசிஸ் இதுவரை ஐபிஎல்லில் 100 போட்டிகளில் (93 இன்னிங்ஸ்) விளையாடி 22 அரை சதங்களுடன் 34.94 சராசரி மற்றும் 131.08 ஸ்ட்ரைக் ரேட்டில் 2935 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லின் கடைசி நான்கு சீசன்களில், அவர் 47 இன்னிங்ஸ்களில் விளையாடி 1640 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த சீசனில் சிறந்த பார்மில் இருந்த அவர் அதில் மட்டும் 633 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பொறுப்பு குறித்து பேசியுள்ள டு பிளெசிஸ், "இந்த வாய்ப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் நிறைய ஐபிஎல் விளையாடியுள்ளேன். வெளிநாட்டு வீரரை நம்புவது சிறிய விஷயம் அல்ல என்பது எனக்கு புரியும். எனவே, இந்திய வீரர்களின் அற்புதமான பங்களிப்பை நான் பெரிதும் நம்பியிருப்பேன்" என்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT