Published : 18 Apr 2016 03:59 PM
Last Updated : 18 Apr 2016 03:59 PM
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் 11-வது போட்டியில் விராட் கோலியின் அதிரடி 79 ரன்களை முறியடிக்கும் விதமாக டெல்லி டேர் டெவில்ஸ் வீரர் குவிண்டன் டி காக் 48 பந்துகளில் அடித்த சதம் பெங்களூருவுக்கு தோல்வி தேடித் தந்தது.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணி கோலி (79), டிவில்லியர்ஸ் (55), வாட்சன் (33) ஆகியோர் பிரமாதமாக ஆட 191 ரன்கள் குவித்தது. மொகமது ஷமி 4 ஓவர்களில் 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார், தொடக்கத்தில் ஜாகீர் கான், கிறிஸ் கெய்லை 0-வில் வீழ்த்தினார். பிராத்வெய்ட் 2 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்.
தொடர்ந்து ஆடிய டெல்லி டேர் டெவில்ஸ் அணியில் 48 பந்துகளில் சதம் அடித்த குவிண்டன் டி காக், 51 பந்துகளில் 15 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 108 ரன்கள் எடுக்க, கருண் நாயர் 42 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ 19.1 ஓவர்களில் 192/3 என்று டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. பெங்களூரு அணியில் வாட்சன் மட்டுமே சிறப்பாக வீசி 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 22 பந்துகளில் அரைசதம் கண்ட டி காக் அடுத்த 26 பந்துகளில் மேலும் 50 ரன்கள் குவித்து சதம் கண்டார். இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 184 என்று வெற்றியை உறுதி செய்யும் நிலையில் இருந்தது.
இந்தச் சதம் குறித்து குவிண்டன் டி காக் கூறியதாவது:
நான் இந்த இன்னிங்ஸை முழுதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினேன். இது என்னுடைய சிறந்த இன்னிங்ஸ் என்று கூற மாட்டேன், ஆனால் அது தேவைப்படும் தருணத்தில் வந்தது. மேலும் இவ்வளவு பெரிய இலக்கைத் துரத்தி வெற்றி கண்டது மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது” என்றார்.
பெங்களூரு அணி 200 ரன்களுக்கும் மேல் சென்றிருக்கும் ஆனால் மொகமது ஷமியின் பந்து வீச்சும் மற்றும் கடைசி 4 ஓவர்களில் 27 ரன்களையே விட்டுக் கொடுத்ததும் பெங்களூருவை மட்டுப்படுத்தியது.
டி காக் மேலும் கூறும்போது, “250 ரன்களை துரத்த வேண்டியிருக்கும் என்றே நினைத்தோம். இலக்கை விரட்டும் போது தன்னம்பிக்கையுடன் ஆடினோம்” என்றார்.
நேற்று அவர் ஆஃப் திசையில் பேக்வர்ட் பாயிண்ட், கவர் திசையில் அதிக ஷாட்களை ஆடினார். கட்ஷாட்கள், பேக்புட் பஞ்ச் ஆகியவற்றை பெங்களூரு பீல்டர்களால் தடுக்க முடியவில்லை.
“நாங்கள் அதிகம் எதையும் யோசிக்கவில்லை, பிட்ச் பேட்டிங்குக்கு நன்றாக இருந்தது இதனால் நேராக ஷாட்களை ஆடினாலே போதும் என்று முடிவெடுத்தோம்” என்றார்
விராட் கோலி புகழாரம்:
மிகவும் அருமையான இன்னிங்ஸ். அதுவும் ஸ்பின்னர்களை அவர் எதிர்கொண்ட விதம் அற்புதம். அவர் பந்துக்காக காத்திருந்து ஆடினார். ஒரு விக்கெட் கீப்பராக பிட்ச் எப்படி செயல்படுகிறது என்பதை அவர் நன்றாக அறிந்திருந்தார். அது ஆட்டம் பற்றிய அவரது விழிப்புணர்வை எடுத்துரைக்கிறது. அவர் ஒரு முதன்மையான தரம் வாய்ந்த வீரர்.
சர்வதேச கிரிக்கெட்டில் சமீபகாலங்களாக அவர் தென் ஆப்பிரிக்காவுக்காக சிறப்பாக ஆடிவருகிறார். பேட்டிங் சாதக ஆட்டக்களங்களில் அவர் மிக மிக அபாயகரமான வீரர். முன்னால் வந்து பவுலர்களை அடித்து நொறுக்குவதில் அவர் வல்லவாராகத் திகழ்கிறார். அவர் களத்தில் தனக்கான இடத்தையும், தனக்கான பவுலர்களையும் சிறப்பாகக் குறிவைத்து ஆடினார். அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT