Published : 08 Mar 2022 05:59 PM
Last Updated : 08 Mar 2022 05:59 PM
டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் ஓய்வு கேட்ட விவகாரம் சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணி அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இதற்கான அணியில் மூத்த வீரர் ஷகிப் அல் ஹசன் பெயரும் இடம்பெற்றது. ஆனால் ஷகிப் ’எனக்கு ஓய்வு தேவை. ஒருநாள் தொடரில் விலக நினைக்கிறேன். அப்போதுதான் டெஸ்ட் தொடரில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சியுடன் சிறப்பான பங்களிப்பை கொடுக்க முடியும்’ என்று வங்கதேச கிரிக்கெட் வாரிய (பிசிபி) நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தார். சில தினங்கள் முன் ஷகிப் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்துக்கு ஒப்புதல் தெரிவித்திருந்தாகவும், அந்த முடிவில் இருந்து மாறி இப்போது திடீரென ஓய்வு தேவை எனவும் கூறியது ஏற்புடையதாக அல்ல என்று பிசிபி வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் சர்ச்சை வெடித்துள்ளது.
பிசிபி தலைவர் நஸ்முல் ஹசன் இதுதொடர்பாக கூறும்போது, "வீரர்கள் ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் விளையாடுவதைத் தவிர்க்க விரும்பினால், வாரியத்திற்கு முன்பே தெரிவிக்க வேண்டும் என்பது விதி. மனரீதியாக ஓய்வு வேண்டும் எனச் சொல்லும் ஷகிப் ஐபிஎல் ஏலத்தில் மட்டும் ஏன் தனது பெயரை கொடுத்தார். ஒருவேளை ஐபிஎல் ஏலத்தில் அவர் அணிகளால் வாங்கப்பட்டிருந்தால் இந்நேரம் இதுபோல் ஓய்வு தேவை, விளையாட விரும்பவில்லை என்று சொல்லியிருப்பாரா.
அவர் வங்கதேசத்திற்காக விளையாட விரும்பவில்லை என்றால் நாங்கள் எதுவும் செய்ய முடியாது என்பது உண்மைதான். அதேநேரம், தான் விரும்பிய போட்டிகளில் மட்டும் தான் விளையாடுவேன் என்று அவரால் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அனைத்து வீரர்களிடம் நாங்கள் மென்மையான போக்கை கடைபிடிக்க விரும்புகிறோம். அவர்களும் அதற்கேற்றவாறு தொழில்முறை வீரர்களாக நடந்துகொள்ள வேண்டும். இல்லையெனில் யாரும் விரும்பாத சில முடிவுகளை நாங்கள் எடுக்க வேண்டியிருக்கும்" என எச்சரித்துள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக கிரிக்கெட் தொடர்களில் இருந்து ஷகிப் விலகுவது இது நான்காவது முறையாகும். கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரையும் ஷகிப் புறக்கணித்திருந்தார். அதேபோல், 2017-18 ஆம் ஆண்டு இதேபோல் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தான் முதன்முறையாக விலகிய அவர், கடந்த ஆண்டு இலங்கை டெஸ்ட் போட்டிகளையும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காகத் தவிர்த்தார். ஆனால், இம்முறை ஐபிஎல் ஏலத்தில் ஷகிப்பை எந்த அணிகளும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பதால் தென்னாப்பிரிக்க தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு கேட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment