Published : 05 Mar 2022 08:47 PM
Last Updated : 05 Mar 2022 08:47 PM
தொண்ணூறுகளில் உலகின் நம்பர் 1 லெக் ஸ்பின்னர். இப்போதுவரை லெக் ஸ்பின்னர்களுக்கு அவரே ஆதர்ச நாயகன். கிரிக்கெட்டின் எக்காலத்துக்குமான மிகச்சிறந்த வீரர். இந்த 'நூற்றாண்டின் சிறந்த பந்து' வீசிய வீரர்,சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர், ஆஸ்திரேலியாவின் ஆல் டைம் கிரேட் கிரிக்கெட்டர் என ஷேன் வார்ன் குறித்து சொல்லிக்கொண்டே செல்லலாம்.
தொண்ணூறுகளைச் சேர்ந்த இந்தியர்கள் பலருக்கு சச்சின், அசாருதீன் போன்றோர் நாயகனாக இருந்தால், அனைவருக்குமான ஒரே வில்லன் ஷேன் வார்னாகதான் இருந்திருப்பார். அப்போது இந்தியர்களைத் தாண்டி, இந்தியர்களை கவனம் ஈர்த்த வெளிநாட்டு வீரர் ஷேன் வார்ன் மட்டுமே. நளினம் நிறைந்த அசைவுகளுடன் நாக்கை வெளியே துருத்திக்கொண்டு தனித்துவமான உடல்மொழியுடன் பந்து வீசுவார் வார்ன். அவரின் பந்து வீச்சை எதிர்க்கொள்வது என்பது கரணம் தப்பினால் மரணம் என்ற சாகசம் மாதிரி தான், இருக்கும். அந்த அளவு கிரிக்கெட் உலகம் பெரிய ஜாம்பவான்களாக கொண்டாடிய அனைவரையும் தனது மாயச்சூழலால் சிறுபிள்ளையாக்கித் தவழ வைத்த பெருமை அவருக்கு மட்டுமே உண்டு.
இந்தியாவுக்கு எதிராக தான் ஷேன் வார்னின் அறிமுகம். ஆனால், ரவி சாஸ்திரி, வார்னின் அறிமுகத்தை அவ்வளவு சிறப்பாக இருக்கவிடவில்லை. 1992 டெஸ்ட் சீரிஸ் அது. இரண்டு டெஸ்ட்டில் தோல்வியை தழுவிய இந்தியா, மூன்றாவது டெஸ்ட்டில் சிட்னியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியே வார்னின் அறிமுகம். இந்த அறிமுகத்தை தன்னால் எவ்வளவு சிதைக்க முடியுமோ, அவ்வளவு சிதைத்தார் இந்தியாவின் ரவி சாஸ்திரி. இரட்டை சதம் அடித்த ரவி, வார்ன் ஓவரில் தான் அதிக ரன்களை எடுத்தார். மொத்தம் 200 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரே விக்கெட் மட்டுமே எடுத்த வார்ன் அடுத்த போட்டியில் விளையாட தேர்வாகவில்லை. ரவிசாஸ்திரி அடித்த அடி அப்படி.
இனி அணியில் இருந்து கழட்டிவிடப்படுவார் என எதிர்பார்த்த நிலையில் தான் உள்ளூர் போட்டிகளில் ஆடிய பெர்பாமென்ஸ் காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்தார். அந்தப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் லெஜெண்ட் ரிச்சி ரிச்சர்ட்சன் விக்கெட்டை வீழ்த்தி தனது வருகையை முதல்முறையாக பதித்தார் வார்ன். அடுத்து, 1993 ஆஷஸ் தொடரில் இருந்து வார்னின் ஆட்சி தொடங்கியது. அந்த ஆண்டு ஆஷஸ் தொடர் இங்கிலாந்து மண்ணில் நடந்தது. முதல் போட்டியில் அவரின் முதல் டெலிவரியைச் சந்தித்தவர் இங்கிலாந்து வீரர் மைக் கேட்டிங். மைக் கேட்டிங்கை பொறுத்தவரை ஸ்பின்னர்களுக்கு எதிராக தரமாக விளையாட கூடிய ஒரு பேட்ஸ்மேன். இதனால் வார்ன் பந்துவீச்சை மைக் கேட்டிங் பொளக்க போகிறார் என்பதே அன்று அனைவரின் எண்ணமும் இருந்தது.
அந்த எண்ணங்களுக்கு மாறாக, அங்கு நடந்ததோ வேறு. வலது கை பேட்ஸ்மேன் ஆன கேட்டிங்கிற்கு லெக் ஸ்டம்பிற்கு வெளியே ஒரு லெக் பிரேக் வீசினார் வார்ன். டிஃபன்ஸ் செய்ய முயன்ற கேட்டிங்கின் பேட்டையும் மீறி ஸ்டம்ப் பெயில்ஸை பதம் பார்க்கும். கேட்டிங் நடந்தது என்னவென தெரியாமல் குழம்பிகொண்டு மைதானத்தில் இருந்து வெளியேறுவார். இந்த டெலிவரி தான் நூற்றாண்டின் சிறந்த பந்தாக தேர்வு செய்யப்பட்டது. ஆம், இந்த ஒரு டெலிவரி அடுத்த பல சாதனைகளுக்கான டீசர் என அன்று காட்டியிருந்தார் வார்ன்.
வேகப் பந்துவீச்சாளர்கள் டாமினேட் செய்துகொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்தார் வார்ன். எப்படிப்பட்ட ஆடுகளமாக இருந்தாலும் சரி, வார்ன்னால் பந்தை சுழலவைக்க முடியும். லெக் ஸ்பின் தான் வீசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். எனினும், எந்த இடத்தில் பிட்ச் ஆகி எப்படி வரப்போகிறது எனத் தெரியாமல் பேட்ஸ்மேன்களை கலங்கடிப்பார். லெக் ஸ்பின், கூக்ளி போன்ற வகைகளில் பந்துவீசுவது இயல்புதான். அவற்றைத் தாண்டி பந்தை எத்தனை இஞ்ச் திரும்ப வைக்க வேண்டும் என்ற துல்லியத்துடன் வார்ன் பந்துவீசுவார். வலது கை பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசும் போது ஆப் ஸ்டெம்பை துல்லியமாகத் தாக்கும் விந்தை அவருக்கு மட்டுமே கைவரப் பெற்ற வித்தை.
அவரின் தனித்துவமான சுழல் மந்திரத்தால் தனிமதிப்புடன் கொண்டப்பட்டவர் வார்ன். மாயாஜால சூழலின் காரணமாக, 1992ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆடவந்தாலும், 1994, 97, 2000ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டின் பைபிள் எனப்படும் விஸ்டன் புத்தகத்தில் வார்ன் பெயர் இடம்பெற்றது. அதுவும் 2000ல் நூறு ஆண்டுகளில் உலகம் கண்ட தலைசிறந்த 5 வீரர்களில் ஒருவராக வார்ன் பெயரை வெளியிட்டு அவருக்கு மதிப்பு செய்தது விஸ்டன் புத்தகம். 1992 முதல் 2007 வரையில் 145 டெஸ்ட் போட்டிகளிலும், 194 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியவர். ஒரு நாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளையும், டெஸ்ட் போட்டிகளில் 708 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
களத்தில் ஆக்ரோஷமாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தலைக்கனமற்ற ஒரு விளையாட்டு வீரனாக எல்லோரிடம் நட்புடன் பழகியவர். இதனால், அவருக்கு எண்ணற்ற நண்பர்கள் சொந்த அணியை கடந்து உள்ளனர். இப்போதுதான் முடிந்தது போன்றிருக்கிறது ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், கும்ப்ளே ஆகியோரின் சாம்ராஜ்யம். அதற்குள் கிரிக்கெட் வார்னையை இழந்திருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலரால்தான் நம் மனதில் எப்போதும் சுழன்று கொண்டேயிருக்கும் நினைவுகளை ஏற்படுத்த முடியும். ஷேன் வார்ன், அப்படிப்பட்ட ஒருவர்.
சுழல் ஜாம்பவானுக்கு அஞ்சலிகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT