Published : 05 Mar 2022 06:36 PM
Last Updated : 05 Mar 2022 06:36 PM
மொஹாலி: மொஹாலி டெஸ்ட்டின் இரண்டாவது நாள் ஆட்டநேர முடிவில் இலங்கை அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 357 ரன்கள் குவித்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கியது. தொடக்கத்தில் இருந்தே ரவீந்திர ஜடேஜா - அஸ்வின் இணை இலங்கை அணியை டாமினேட் செய்தது. இருவரும் சீரான வேகத்தில் ரன்கள் குவித்தனர். சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா சர்வதேசப் போட்டியில் தனது இரண்டாவது சதத்தை பதிவு செய்தார். அதேபோல் மறுமுனையில் இருந்த அஸ்வின், ஜடேஜாவுக்கு பார்ட்னர்ஷிப் கொடுத்ததோடு இல்லாமல் அரைசதம் கடந்தார்.
அஸ்வின் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், ஜடேஜா வேகம் எடுத்தார். பவுண்டரிகளாக விளாசிய அவர், 175 ரன்கள் குவித்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா. இதனால், 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் என்ற நிலையில் முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது இந்திய அணி. முகமது ஷமி 20 ரன்களுடனும், ஜடேஜா 175 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் லக்மல், பெர்னாண்டோ ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் கருணாரத்னே, லஹிரு திரிமானே ஆகியோர் துவக்கம் கொடுத்தனர். மிகவும் நிதானமாக ஆடிய இந்த ஜோடியை அஸ்வின் பிரித்தார். முதல் ஆளாக 17 ரன்கள் எடுத்த நிலையில் லஹிரு திரிமானே, அஸ்வின் ஓவரில் வெளியேற, அடுத்தடுத்து வந்தவர்களும் நிலைத்து ஆடாமல் வெளியேறினர். இலங்கை கேப்டன் கருணாரத்னே 28 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா ஓவரிலும், சீனியர் வீரர் மேத்யூஸ் 26 ரன்களில் பும்ரா ஓவரிலும், தனஜ்செயா டி செல்வா ஒரு ரன் மட்டுமே எடுத்த நிலையில் அஸ்வின் ஓவரிலும் அவுட் ஆகினர்.
இறுதியில் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி 108 ரன்கள் எடுத்துள்ளது. சரித் அஸ்லங்கா ஒரு ரன்னுடனும், பதுன் நிசாங்கா 26 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் அஸ்வின் அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
கபில்தேவ் சாதனையை முறியடித்த ஜடேஜா: 7-வது வீரராக அல்லது அதற்கு கீழ் களமிறங்கி அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை இதற்கு முன் முன்னாள் கேப்டன் கபில்தேவ் வசமிருந்தது.1986-ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 7-வது வீரராக களமிறங்கி கபில் தேவ் 163 ரன்கள் குவித்திருந்தார். இன்று இந்த சாதனையை ரவீந்திர ஜடேஜா முறியடித்தார். இந்தப் போட்டியில் 7-வது வீரராக இறங்கி முதல் இன்னிங்சில் 175 ரன்கள் குவித்து 35 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
விராட் கோலிக்கு சிறப்பு வரவேற்பு: முன்னதாக, இந்திய அணி பீல்டிங் செய்ய களம்புகுந்த போது விராட் கோலிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வீரர்கள் இருபுறமும் நின்றுகொண்டு கைதட்டி விரட்டி கோலியை மைதானத்திற்குள் வரவேற்றனர். விராட் 100-வது டெஸ்ட்டில் விளையாடுவதை அடுத்த இந்த வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT