Published : 05 Mar 2022 03:35 PM
Last Updated : 05 Mar 2022 03:35 PM
பாங்காக்: தாய்லாந்தில் மரணம் அடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் விவரித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷேன் வார்ன், தாய்லாந்துக்கு மூன்று மாத ஓய்வுக்காகச் சென்றவர் திடீர் மரணமடைந்த செய்தி, விளையாட்டு உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது வில்லா இல்லத்தில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனிடையே, வார்னின் கடைசி நிமிடங்கள் குறித்து அவரின் மேலாளர் ஜேம்ஸ், ஊடகங்களிடம் பேசியுள்ளார். அதில், "ஷேன் வார்ன் மூன்று மாத ஓய்வு எடுக்க திட்டமிருந்தார். அதன் தொடக்கம்தான் இது. தாய்லாந்து நேற்றுமுன்தினம் இரவுதான் வந்திருந்தார்.
மாலை 5 மணிக்கு மது அருந்த செல்வது அவர்கள் வழக்கம். வார்ன், எப்போதும் நேர மேலாண்மையைக் கடைபிடிப்பவர். மற்றவர்களை எப்போதும் 'வா, லேட் ஆகப் போகிறது' என்று அவரே துரிதப்படுத்தப்படுத்துவார். ஆனால், நேரம் ஆகியும் வார்ன் வரவில்லை. ஏதோ தவறாக நடக்கிறது என்பதை உணர்ந்த நண்பர்கள் 5.15 மணிக்கு வார்ன் அறையின் கதவை தட்டியுள்ளனர். அங்கே உணர்வில்லாமல் இருந்த அவருக்கு நண்பர் ஒருவர் சிபிஆர் முதலுதவி செய்தார். ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமாகலாம் என்பதால் அவர்களே முதலுதவி செய்தனர்.
ஆம்புலன்ஸ் வந்தபின், அவர்களும் வார்னுக்கு 10 - 20 நிமிடங்கள் சிபிஆர் முதலுதவி சிகிச்சை செய்தனர். மருத்துவமனை கொண்டுசென்றும் அவரின் உயிரைக் காப்பாற்ற முயற்சி செய்யப்பட்டது. ஆனால் பலனில்லை. வார்ன் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" என்று விவரித்துள்ளார்.
ஷேன் வார்னுக்கு தாய்லாந்தின் கோஹ் சாமுய் (Koh Samui) பகுதியில் வில்லா ஒன்று உள்ளது. இங்கு தனது மூன்று நண்பர்களுடன் விடுமுறையை கழிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். வார்னின் நெருங்கிய நண்பராகவும், உதவியாளராகவும் அறியப்படும் ஆண்ட்ரூ நியோபிடோவ் (Andrew Neophitou) என்பவர்தான் கடைசி நிமிடங்களில் அவருக்கு முதலுதவி செய்துள்ளார். ஆனால், அவரின் முயற்சிகள் அனைத்தும் வீணாகின. தற்போது தாய்லாந்து மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அவரின் உடல் வைக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆஸ்திரேலியாவுக்கு அவரின் உடல் கொண்டுச் செல்லப்படும் என்று தெரிகிறது.
ஷேன் வார்ன் கிரிக்கெட் உலகில் ஆகச்சிறந்த லெக் ஸ்பின்னர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1992 முதல் 2007-ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்களை வீழ்த்தினார். அதேவேளையில் 194 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 293 விக்கெட்களை வேட்டையாடியிருந்தார். பேட்டிங்கிலும் வலுசேர்த்த அவர், டெஸ்ட் போட்டியில் 3,154 ரன்களும், ஒருநாள் போட்டிகளில் 1,018 ரன்களும் சேர்த்திருந்தார்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஷேன் வார்ன் அங்கம் வகித்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வு பெற்ற பின்னர் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடியிருந்தார். இவரது தலைமையில் ராஜஸ்தான் அணி சாம்பியன் பட்டமும் வென்றிருந்தது. கிரிக்கெட் வர்ணனையாளராகவும் வலம் வந்த வார்னின் திடீர் மறைவு, ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT