Published : 03 Mar 2022 08:39 PM
Last Updated : 03 Mar 2022 08:39 PM
மொஹாலி: "100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை" என்று நாளை தனது 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள விராட் கோலி பேசியுள்ளார்.
100 டெஸ்ட் போட்டிகளை எட்டிய 12-வது இந்தியர் என்ற பெருமையை பெற தயாராகி வருகிறார் விராட் கோலி. நாளை இலங்கை அணிக்கு எதிராக நடக்கவிருக்கும் போட்டி சர்வதேச அளவில் அவரின் 100-வது டெஸ்ட் போட்டி. உலகளவில் இந்தச் சாதனையை 70 பேர் இதுவரை படைத்துள்ளனர். 71-வது வீரராக நாளை சாதனை படைக்கவிருக்கும் கோலி, இதில் தனது 71-வது சதத்தை அடிப்பாரா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள விராட் கோலி, "100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. இது எனக்கும், எனது குடும்பத்துக்கும், எனது பயிற்சியாளருக்கும் பெரிய தருணம். இது ஒரு நீண்ட பயணம். இதில் நிறைய கிரிக்கெட், நிறைய பாடங்கள் கற்றுக்கொண்டேன். இந்தப் பயணத்தில் என்னுடன் இருந்த அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். கடவுள் கருணையால் அனைத்தும் நடக்கிறது. உடல்தகுதியை நிரூபிக்க நிறைய உழைத்து வருகிறேன்" என்று நெகிழ்ந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான விராட் கோலி, அதில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 4 மற்றும் 15 ரன்களை மட்டுமே எடுத்தார். அதன்பிறகான இந்த ஒரு தசாப்த கால பயணத்தில் பல சாதனைகளை புரிந்துள்ள விராட், டெஸ்ட் போட்டிகளில் 50.39 என்ற சராசரியுடன் 7,962 ரன்களை குவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT