Published : 02 Mar 2022 07:22 PM
Last Updated : 02 Mar 2022 07:22 PM
சென்னை: ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ஜேசன் ராய்க்கு பதிலாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவை தேர்வு செய்ய வேண்டும் என்று குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் கோரிக்கை விடுக்கும் வகையில், ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்துவருகின்றனர்.
ஐபிஎல் 15-வது சீசனில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் நேற்று அறிவித்தார். குஜராத் டைட்டன்ஸ் அணியால் ரூ.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டிருந்த ராய், கரோனா சூழலால் இருக்கும் பயோ - பப்புள் நிலையால் சோர்வடைந்துள்ளதாகவும், இந்த நேரத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடவிருப்பதாகவும் கூறி, ஐபிஎல் தொடரில் விலகும் அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில், ஜேசன் ராய்க்கு மாற்று வீரராக சுரேஷ் ரெய்னா அணியில் சேர்க்க வேண்டும் என்று இன்று காலை முதலே ரசிகர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதனால், காலை முதல் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சுரேஷ் ரெய்னா பெயர்கள் ட்ரெண்டிங்கில் உள்ளது. கடந்த சீசன் வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த ரெய்னாவை, சில நாட்கள் முன் நடந்த ஐபிஎல் ஏலத்தில் யாரும் எடுக்க முன்வரவில்லை. ஐபிஎல் லீக்கில் 5000 ரன்களுக்கு மேல் எடுத்த ஆறு வீரர்களில் ஒருவர், 205 ஐபிஎல் போட்டிகளில் 5528 ரன்கள் எடுத்த ஒரு வீரர் என்ற சாதனையால், 'மிஸ்டர் ஐபிஎல்' என ரசிகர்களால் அழைக்கப்பட்டுவந்த ரெய்னா ஏலம் போகாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் ஃபார்மில் இல்லை என்பதால்தான் எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்க முன்வரவில்லை. எனினும், அவர் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருப்பதையே இன்றைய ட்ரெண்டிங் காட்டுகிறது.
ரசிகர்கள் ராய்க்கு பதிலாக ரெய்னாவை சேர்க்க வேண்டும் என்று ட்ரெண்ட் செய்து வருகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தடை செய்யப்பட்டிருந்தபோது குஜராத் லயன்ஸ் அணியை ரெய்னா வழிநடத்தினார். இதனை நியாபகப்படுத்தி ரசிகர்கள், அந்த அணி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
நிகில் என்ற பயனர். "குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகிகளின் கவனத்திற்கு... ஜேசன் ராய்க்குப் பதிலாக சுரேஷ் ரெய்னாவை நீங்கள் தேர்வு செய்தால், உங்கள் அணிக்கு கிட்டத்தட்ட 10M+ ரசிகர்களை கிடைப்பார்கள். உங்கள் பிராண்ட் மதிப்புக்கு இது முக்கியமானது" என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல் உத்தர்குப்தா என்ற பயனர், "ஓர் உண்மையான கிரிக்கெட் ரசிகனாக நான், ரெய்னா ஐபிஎல் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால், ஐபிஎல் கிரிக்கெட்டின் ஆன்மா அவர். ரெய்னா தான் ஐபிஎல் என்ற பிராண்டை பிரபலப்படுத்தியவர். இது சிஎஸ்கே ரசிகர்களின் எதிர்பார்ப்பும்கூட" என்று பதிவிட்டுள்ளார்.
விகாஸ் யாதவ் என்ற பயனோரோ, "ராய்க்கு பதிலாக ரெய்னாவை தேர்வு செய்து பாருங்கள், அடுத்து சிஎஸ்கே அணியின் பாதி ரசிகர் பட்டாளம் உங்கள் பின்புதான் இருக்கும்" என்றுள்ளார்.
இப்படி பலரும் ரெய்னாவுக்காக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கும், அதன் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் ட்விட்டர் மூலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அந்த அணி தரப்பில் இதுவரை மாற்று வீரர் யார் என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment