Published : 28 Feb 2022 05:10 PM
Last Updated : 28 Feb 2022 05:10 PM
புதுடெல்லி: 'இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை' என்று இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் உடனான போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த பின், முகமது ஷமி வலைதளங்களில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார். அவருக்கு எதிராக ட்ரோல்கள் செய்யப்பட்டன. பலர் ஷமிக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரங்களை முன்வைத்தனர். அப்போது அந்த நிகழ்வு, விவாதங்களுக்கு வித்திட்டது. இதனிடையே, ஆங்கில ஊடகம் ஒன்று பேட்டியளித்த ஷமி, அந்த நிகழ்வு தொடர்பாக பேசியுள்ளார்.
அதில், தன்னை ட்ரோல் செய்தவர்கள், உண்மையான ரசிகர்களோ அல்லது உண்மையான இந்தியர்களோ அல்ல என்று ஷமி தெரிவித்துள்ளார். மேலும் அவர், "சமூக ஊடகங்களில் தங்களின் சுய விவரங்களை கூட வெளியிடாதவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளால் அவர்கள் எதுவும் இழக்கப் போவதில்லை. அவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. இந்தியா மீதான எனது விசுவாசத்தை யாரிடமும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. நாங்கள் யாரென்பது எங்களுக்கு தெரியும். இந்தியா என்றால் என்ன என்பதை எங்களுக்கு யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஏனென்றால் நாங்கள் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி வருகிறோம். இந்தியாவிற்காக போராடி வருகிறோம். எனவே, இதுபோன்ற ட்ரோல்களுக்கு எதிர்வினையாற்றி நாங்கள் யாருக்கும், எதையும் நிரூபிக்க வேண்டியதில்லை" என்று தெரிவித்துள்ளார்.
2013-ல் இந்திய அணிக்காக அறிமுகமான ஷமி, 57 டெஸ்ட் போட்டிகளில் 209 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் முக்கிய பவுலராக உருவெடுத்துள்ள ஷமி தற்போது மணிக்கட்டு காயத்துக்கு சிகிச்சை எடுத்து வருகிறார். இதனால், இலங்கை அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்காத அவர், மார்ச் மாத இறுதியில் தொடங்கும் ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT