Last Updated : 28 Feb, 2022 04:59 PM

1  

Published : 28 Feb 2022 04:59 PM
Last Updated : 28 Feb 2022 04:59 PM

’தினமும் 7 மணி நேரம் பயிற்சி’ - உலக சாம்பியனை நோக்கி பாயும் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா

பெ.மாரிமுத்து

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தாவை, நாடே வாழ்த்து மழையில் குளிப்பாட்டி வருகிறது. இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.16 வயதான பிரக்ஞானந்தா சமீபத்தில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரபிட் செஸ் போட்டியின் 8-வது சுற்றில் உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.

இந்தத் தொடரில் 3 வெற்றிகளை குவித்திருந்த நிலையிலேயே கார்ல்சன், பிரக்ஞானந்தாவை எதிர்கொண்டிருந்தார். கருப்புநிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 31 வயதான கார்ல்சனை தனது 39-வது நகர்த்தலின்போது சாய்த்தார்.

இதன்மூலம், உலகின் முதல் நிலை வீரரை வீழ்த்திய முதல் இந்திய இளம் வீரர் என்கிற பெருமையை பிரக்ஞானந்தா பெற்றார். இதற்கு முன்னர் விஸ்வநாதன் ஆனந்த், ஹரி கிருஷ்ணா ஆகியோரும் கார்ல்சனுக்கு எதிராக வெற்றி கண்டிருந்தனர்.

சென்னை பாடி பகுதியைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 2005-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ல் பிறந்தார். தற்போது அவர், தனியார் பள்ளி ஒன்றில் 11-ம் வகுப்பு கணினி அறிவியல் பயின்று வருகிறார். பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூட்டுறவு வங்கியில் பணிபுரிந்து வருகிறார். தாய் நாகலெட்சுமி. பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி. இவரும் செஸ் போட்டியில் அசத்தி வருகிறார்.

அக்காவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பிரக்ஞானந்தா செஸ் விளையாட தொடங்கினராம். அது தற்போது உலக சாம்பியனை வீழ்த்தும் தூரம் சென்றுள்ளது.
தனது 5 வயதில் செஸ் விளையாடத் தொடங்கி 7 வயதில் ஃபிடே மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார் பிரக்ஞானந்தா. தொடர்ந்து 2013-ம் ஆண்டு 8 வயதுக்கு உட்பட்டோருக்கான சாம்பியன்ஷிப்பையும், 2015-ம் ஆண்டு 10 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் வென்று அசத்தினார். 2016-ல் உலகின் இளம் இன்டெர்நேஷ்னல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்றார் பிரக்ஞானந்தா.

பின்னர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வதில் முனைப்பு காட்டிய பிரக்ஞானந்தா அதற்கான தகுதிச் சுற்றுகளிலும் வெற்றி பெற்று, ஃபிடே ரேட்டிங்கும் பெற்றார். அதன் வாயிலாக கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 12 வயதிலேயே வென்றார். இதன் மூலம் உலகளவில் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற 5-வது வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார் பிரக்ஞானந்தா.

2014-ம் ஆண்டு வரை, கிராண்ட் மாஸ்டர் ஆர்.பி. ரமேஷிடம் பயிற்சி பெற்று வந்தார் பிரக்ஞானந்தா. இதன்பின்னர் 2021-ம் ஆண்டு முதல் செஸ் ஜாம்பவானான விஸ்வநாதன், பிரக்ஞானந்தாவுக்கு ஆலோசகராவும், வழிகாட்டியாகவும் உள்ளார். வெஸ்ட் பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் ஓர் அங்கமாகவும் பிரக்ஞானந்தா வலம் வருகிறார்.

ஒரு ஆட்டத்தில் தோல்வி

பிரக்ஞானந்தா கூறும்போது, “கார்ல்சன் போன்ற வீரருக்கு எதிரான ஆட்டத்தை எளிதாக கருத முடியாது. அவருக்கு எதிரான ஆட்டத்தில் 32-வது நகர்த்தல்தான் முக்கிய
மானதாக இருந்தது. ஏனெனில் அதுவரை இருவரது நிலையும் சமமாகவே இருந்தது. கார்ல்சன் செய்த பிழைக்கு பின்னர் விஷயங்கள் மாறத் தொடங்கின. இதுவரை அவருக்கு எதிராக 3 முறை மோதி உள்ளேன். ஒரு ஆட்டத்தை டிரா செய்தேன். ஒரு ஆட்டத்தில் தோல்வி ஏற்பட்டது. தற்போது வெற்றி கண்டுள்ளேன்.

ஒரு நாளைக்கு 7 மணி நேரம் பயிற்சி மேற்கொள்வேன். பொழுபோக்குக்காக நேரம் கிடைக்கும்போது கிரிக்கெட், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இணைய வழி செஸ் போட்டியும் போர்டு முன் அமர்ந்து நேரடியாக விளையாடும் போட்டியும் ஒன்றுதான். ஒரே குறை என்னவென்றால் இணைய வழி போட்டியில் வீரர்களின் உணர்வுகளை காண இயலாது. பல ஆண்டுகளாக ரமேஷ் சாரிடம் மேற்கொண்ட பயிற்சி எனது ஒட்டுமொத்த விளையாட்டை வடிவமைத்துள்ளது.

மேலும் வெஸ்ட் பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமியில் அங்கம் வகிப்பதன்மூலம் விஸ்வநாதன் ஆனந்த் சாரின் ஆலோசனைகள் எனது விளையாட்டுக்கு வேறு பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. உலக சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதுதான் எனது இலக்கு. அடுத்ததாக இத்தாலியில் நடைபெறும் போட்டியில் பங்கேற்பதற்காக பயணம் செய்ய உள்ளேன்” என்றார்.

பெயர் காரணம்....

பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு கூறும்போது, “நாங்கள் கல்கி பகவானின் பக்தர்கள். கல்கி ஆஷ்ரமத்தில் உள்ள ஒரு சாமியார்தான் எங்களது இரு குழந்தைகளுக்கும் பெயர் சூட்டினார். பிரக்ஞானந்தா என்ற பெயரை அவர்தான் தேர்வு செய்தார்” என்றார். ஒரு நாள் பையனின் காலடியில் உலகம் இருக்கும் என்று சாமியார் வாழ்த்தியுள்ளார். அவர் கூற்றுப்படியே பிரக்ஞானந்தா விரைவில் போட்டிகளில் விளையாடத் தொடங்கி வெற்றிகளை குவிக்கத் தொடங்கியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x