Published : 28 Feb 2022 03:02 PM
Last Updated : 28 Feb 2022 03:02 PM
சண்டிகர்: ஐபிஎல் 15-வது சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக மயங்க் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். கே.எல்.ராகுல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு சென்ற நிலையில், மயங்க் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூத்த வீரர் ஷிகர் தவான் அணியில் இருந்தும் மயங்க் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
2018-ம் ஆண்டு முதல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார் மயங்க் அகர்வால். துணை கேப்டனாகவும், கடந்த சில சீசனில் சில போட்டிகளில் கேப்டனாகவும் அணியை வழிநடத்திய அனுபவம் அவருக்கு உள்ளதை அடுத்து, தற்போது நிரந்தர கேப்டனாக நியமித்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம். கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பேசிய மயங்க், "2018 முதல் இந்த அற்புதமான அணியின் ஓர் அங்கமாக இருந்து வருகிறேன். கேப்டன் என்கிற பொறுப்பை ஏற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். இந்தப் பொறுப்பை மிகுந்த நேர்மையுடன் அணுக விரும்புகிறேன். அதேநேரம், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள திறமைகளைக் கொண்டு இந்த சீசனில் எனது பணி எளிதாக அமையும் என நம்புகிறேன்.
இம்முறை எங்கள் அணியில் உள்ள சில அனுபவமிக்க வீரர்களுடன் பல திறமையான இளைஞர்கள் வாய்ப்பை பகிர்ந்துகொள்ள உள்ளனர். எப்போதும் கோப்பை வெல்ல வேண்டும் என்பதே எங்கள் அணியின் இலக்கை நம்பிக்கையாகக் கொண்டே களமிறங்கியுள்ளோம். இந்த முறையும் அந்த இலக்கை நோக்கி ஒரு அணியாக செயல்படுவோம். அதில், புதிய பொறுப்பை கொடுத்துள்ள அணி நிர்வாகத்துக்கு எனது நன்றி. ஐபிஎல் புதிய சீசனையும், அதில் ஏற்பட போகும் புதிய சவால்களையும் எதிர்நோக்கி உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார். கடந்த சீசன்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மயங்க் அகர்வாலை பஞ்சாப் அணி நிர்வாகம் ரூ.14 கோடிக்கு தக்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே இது தொடர்பாக பேசுகையில், "மயங்க் அகர்வால் ஓர் உற்சாகமான வீரர். அவரின் தலைமையின் கீழ் எதிர்காலத்திற்கான இளம் அணியை உருவாக்குவதில் பஞ்சாப் அணி நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்த சீசனில் பங்கேற்கவுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் விவரம்:
மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங், ஷிகர் தவான், ககிசோ ரபாடா, ஜானி பேர்ஸ்டோவ், ராகுல் சாஹர், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, இஷான் போரல், லியாம் லிவிங்ஸ்டோன், ஒடியன் ஸ்மித், சந்தீப் சர்மா, ராஜ் அங்கத் பாவா, ரிஷிக் தவான், பிரேராக் மன்கட், வைபவ் அரோரா, ரிட்டிக் சாட்டர்ஜி, பால்தேஜ் தண்டா, அன்ஷ் படேல், நாதன் எல்லிஸ், அதர்வா டைடே, பானுகா ராஜபக்சே, பென்னி ஹோவெல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...