Published : 26 Feb 2022 08:29 PM
Last Updated : 26 Feb 2022 08:29 PM
கீவ்: ரஷ்யாவின் படையெடுப்பை சமாளிக்க, உக்ரைன் நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை வீரர்களும், சகோதரர்களுமாகிய கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ராணுவத்தில் இணைந்து போரிட்டு வருகின்றனர்.
உக்ரைனில் 3-வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஆனால், அந்த நகரை தக்கவைப்பதில் உக்ரைன் ராணுவம் கடுமையாக போராடி வருகிறது. இந்தப் போர் பதற்றத்தால் அந்நாட்டில் உள்ள வெளிநாட்டினர் வெளியேறி வருகின்றனர். தரை, வான் மற்றும் கடல் என அனைத்து மார்க்கத்திலும் ரஷ்யா தனது படையெடுப்பை நடத்தி வருகிறது. ரஷ்ய தாக்குதலை சமாளிக்க, உக்ரைன் அதிபர் தமது குடிமக்களுக்கு போராட அழைப்பு விடுத்த நிலையில், முன்னாள் குத்துச்சண்டை வீரர்கள் இருவர் ராணுவத்தில் இணைந்து போராடி வருகின்றனர்.
உக்ரைன் நாட்டின் முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை சாம்பியன் விட்டலி கிளிட்ச்கோ மற்றும் அவரின் சகோதரர் விளாடிமிர் கிளிட்ச்கோ என இருவரும் தற்போது தங்கள் சொந்த நாட்டைக் காக்க ராணுவப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர். 2014-ம் ஆண்டு முதல் உக்ரைன் தலைநகர் கீவின் மேயராக இருந்து வரும் விட்டலி கிளிட்ச்கோ, போர்ச் சூழல் நெருங்கிய நிலையில், இந்த மாதத் தொடக்கத்திலேயே ஆயுதம் ஏந்த தயாராக இருப்பதாக அறிவித்தார்.
கிளிட்ச்கோ சகோதரர்கள் குத்துச்சண்டை போட்டிகளில் பல சாதனைகள் புரிந்தவர்கள். இருவருமே ஹால் ஆஃப் ஃபேம்களாக அறியப்படுபவர்கள். இதனிடையே, போர் தொடர்பாக விட்டலி கிளிட்ச்கோ பேசும்போது, "எங்களுக்கு வேறு வழியில்லை. எங்கள் தேசத்துக்காக சண்டையிட்டே ஆகவேண்டும். கீவ் நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. காவல்துறை மற்றும் ராணுவப் படைகளுடன் இணைந்து பணியாற்றுவதே இப்போது எங்களின் முன்னுரிமை. கீவ் நகரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவ வீரர்களாக மாறத் தயாராகி உள்ளனர். நான் என் நாட்டை நம்புகிறேன், என் மக்களை நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
50 வயதாகும் அவர் சொன்னபடியே இப்போது உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்து பாதுகாப்பு பணிகளைச் செய்துவருகிறார். கிளிட்ச்கோ சகோதரர்கள் இருவரும் ஆயுதம் ஏந்தியபடி ராணுவ பணிகள் செய்துவரும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. போரின் முதல் நாள் இவர்கள் இருவரும் ஆயுதங்கள் ஏந்தியபடி பேட்டி அளித்துள்ளனர். அதில், "தேசத்தின் மீதான அன்பே இந்தப் பணியை செய்யத் தூண்டியது. உக்ரைனிய மக்கள் வலிமையானவர்கள். இறையாண்மை மற்றும் அமைதிக்காக ஏங்கும் மக்கள். ரஷ்ய மக்களை தங்கள் சகோதரர்களாகக் கருதும் மக்கள். நாங்கள் அடிப்படையில் இந்தப் போரை விரும்பவில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த புத்தியில்லாத போரில் வெற்றியாளர்கள் இருக்கப்போவதில்லை" என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT