Published : 19 Feb 2022 05:49 PM
Last Updated : 19 Feb 2022 05:49 PM
மும்பை: இலங்கை அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடும் இந்திய அணி விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முழு நேர கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் தோல்வியை அடுத்து விராட் கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு சில மாதங்கள் முன்பு தான் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளின் கேப்டன் பொறுப்பை துறந்திருந்தார். இதையடுத்து, ரோஹித் சர்மா அந்த இரு பார்மெட் போட்டிகளுக்கும் கேப்டனாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது டெஸ்ட் அணிக்கும் முழுநேர கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மார்ச் 1 ஆம் தேதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மூலமாக முழுநேர டெஸ்ட் கேப்டனாக ரோஹித் பணியாற்ற உள்ளார்.
முன்னதாக, டெஸ்ட் கேப்டன் பதவிக்கு கேஎல் ராகுல், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் போன்ற இளம்வீரர்களின் பெயர்களும் பரிசீலிக்கப்பட்டநிலையில் ரோஹித்தின் அனுபவம் அவருக்கு கேப்டன் வாய்ப்பை பெற்றுக்கொடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் சீரான பெர்பாமென்ஸை வெளிப்படுத்தும் வருவதை அடுத்து ரோஹித் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதேநேரம், துணை கேப்டனாக இருந்த அஜிங்கியா ரஹானே மற்றும் முன்னணி வீரர் புஜாரா இருவரும் இலங்கை தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஃபார்ம் அவுட் காரணமாக இருவரும் அணியில் இடம்பிடிக்கவில்லை. இஷாந்த் சர்மாவும் நீக்கப்பட்டுள்ளார். எனினும், 18 பேர் கொண்ட அணியில் புதுமுக வீரராக உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சவுரப் குமார் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். விராட் கோலி, ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அஸ்வினை பொறுத்தவரை, உடல்தகுதி நிரூபித்த பின்னர் அணியில் இணைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரும் அணியில் சேர்க்கப்படவில்லை. தேர்வுக் குழு தலைவர் சேத்தன் சர்மா இது தொடர்பாக பேசுகையில், "ரஹானே மற்றும் புஜாரா குறித்து தேர்வுக்குழு நிறைய நேரம் விவாதித்தது. அவர்கள் இலங்கை தொடரில் சேர்க்கவில்லை. ஆனால், அவர்களுக்கான கதவுகள் திறந்தே உள்ளன. அவர்களை ரஞ்சி டிராபியில் விளையாடச் சொல்லியிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள் விவரம்:
டெஸ்ட் தொடர்: ரோஹித் சர்மா (கேப்டன்), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், ஹனுமா விஹாரி, சுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பரத், அஸ்வின், ரவிந்திர ஜடேஜா, ஜெயந்த் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.
டி20 தொடர்: ரோஹித் சர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஷ் ஐயர், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ஜஸ்பிரிட் பும்ரா (துணை கேப்டன்), புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், சஞ்சு சாம்சன், ரவிந்திர ஜடேஜா, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT