Published : 19 Feb 2022 03:50 PM
Last Updated : 19 Feb 2022 03:50 PM
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டிக்கான அணியில் இருந்து இந்திய வீரர்கள் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பணிச்சுமை காரணமாக இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியிலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியிருக்கிறது இந்திய அணி. மீதம் ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், இந்திய அணியில் இருந்து விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து வடிவிலான போட்டிகளிலும் பங்கேற்கும் இந்த இருவருக்கும் ஓய்வு அளிக்கும் வகையில் அவர்கள் பயோ - பப்புள் பாதுகாப்பில் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
அதேநேரம், இவர்கள் இருவரும் அடுத்துவரும் தொடங்கவிருக்கும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடுவது சந்தேகமே எனத் தெரிகிறது. இலங்கைக்கு எதிரான தொடருக்கான அணி விவரம் இந்த வார இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. என்றாலும், மார்ச் 4ம் தேதி தொடங்கும் டெஸ்ட் தொடரில் விராட் கோலி பங்கேற்பார். அந்த டெஸ்ட் போட்டி அவரின் 100-வது டெஸ்ட் போட்டி ஆகும்.
இதற்கு தயாராகும் விதமாகவும், நீண்ட பணிசுமையில் இருந்து விடுவிக்கும் வகையிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தொடங்கி, அக்டோபர்-நவம்பர் மாதங்களில் டி20 உலகக் கோப்பையுடன், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த ஐபிஎல் தொடர், நியூசிலாந்து தொடர், தென்னாபிரிக்க தொடர், மேற்கிந்திய தீவுகள் தொடர் என இந்திய அணி பயோ - பப்புள் பாதுகாப்பில் பல நாட்களாக இருந்து வருகிறார்கள். இந்த தொடர்களில் நவம்பரில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரியான முதல் டெஸ்ட் போட்டியிலிருந்து மட்டும் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதேபோல், முதுகுவலி காரணமாக தென்னாப்பிரிக்காவில் நடந்த ஜோகன்னஸ்பர்க் டெஸ்ட் தொடரில் அவர் விளையாடவில்லை.
இந்தப் பணிச்சுமையை கருத்தில் கொண்டே இப்போது அவருக்கு ஓய்வு அளித்துள்ளது பிசிசிஐ. இதுதொடர்பாக நேற்றைய போட்டி முடிந்ததும் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உடன் ஆலோசனை நடத்திய பின் அதிகாரபூர்வமாக இதனை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ நிர்வாகி, "பயிற்சியாளர் மற்றும் கேப்டனிடம் கலந்தாலோசித்த பிறகு ஓய்வு முடிவெடுக்கப்பட்டுள்ளது. வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது எங்களுக்கு முன்னுரிமை" என்று தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த நேற்றைய போட்டியில் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் இருவரும் தலா 52 ரன்கள் எடுத்தனர். இவர்களின் உதவியால் இந்திய அணி இரண்டாவது வெற்றியை இந்த தொடரில் ருசித்துள்ளது. தற்போது இருவரும் ஓய்வில் சென்றுள்ளதால், ஸ்ரேயாஷ் ஐயர் அல்லது ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரில் ஒருவருக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். இஷான் கிஷான் விக்கெட் கீப்பிங் பொறுப்பை மேற்கொள்வார். ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட இந்திய வீரர்கள் நீண்ட நாட்களாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறார்கள். இதனால் நாளை நடைபெறும் மூன்றாவது டி20 போட்டியில் ஆடும் லெவனில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT