Published : 18 Feb 2022 05:32 PM
Last Updated : 18 Feb 2022 05:32 PM
இஸ்லமாபாத்: நடப்பு ஆண்டின் பாகிஸ்தான் பிரீமியர் லீக் போட்டிகளில் இதுவரை ஒரு வெற்றியும் பெறாத கராச்சி கிங்ஸ் அணியின் மீது விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த அணியின் கேப்டன் பாபர் ஆஸம்மை மாற்ற வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தொடர்ந்து 8 போட்டிகளாக கராச்சி கிங்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்த நிலையில் பாபர் ஆசமுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட் ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து சல்மான் பட் கூறும்போது, “பிபிஎல் கிரிக்கெட்டில், உங்கள் அணியில் சரியான சமநிலை இல்லை என்றால், நீங்கள் என்ன அதிகமாக ஈடு கொடுத்தாலும் அது பலனளிக்காது. உங்களிடம் நிபுணர்கள் இல்லை என்றால் நீங்கள் எவ்வளவு வலிமையாக திட்டமிட்டாலும் அது அணிக்கு உதவாது.
நான் பார்த்ததில் ஒன்று அல்லது இருவரைத் தவிர எல்லா முக்கிய வீரர்களும் கராச்சி கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர்களாக உள்ளனர். அந்த அணியில் உள்ள முகமது நபி, இமாத் வாசிம், லூயிஸ் கிரிகோரி, உமைத் ஆசிப், கிறிஸ் ஜோர்டான் என அனைவரும் ஆல்ரவுண்டர்கள்தான். அந்த அணியில் சரியான வேகப் பந்துவீச்சாளர், அவுட்ரைட் லெக் ஸ்பின்னர் இல்லை. அவர்கள்தான் விக்கெட் வீழ்த்தக் கூடியவர்கள்.
பெரிய ரன்களை எடுக்கக் கூடிய ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன்களும் இல்லை. 11 பேர் கொண்ட அணியில் 7-8 ஆல்ரவுண்டர்கள் இருந்தால் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. நீங்கள் இப்போது வங்கதேச அணிக்கு தோனி அல்லது ரிக்கி பாண்டிங்கை கேப்டனாக நியமித்தால் அவர்களால் சாம்பியன்களை உருவாக்கிவிட முடியாது. நீங்கள் சில மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்றால், பொறுமையாக இருக்க வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT