Published : 17 Feb 2022 06:01 PM
Last Updated : 17 Feb 2022 06:01 PM
மும்பை: இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜுன் விளையாடுவதை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று கூறியுள்ளார். மேலும், அப்படிப் பார்த்தால் தேவையில்லாத மன அழுத்தத்துக்கு அர்ஜுன் ஆளாவர் எனவும் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜுன் கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியால் ரூ.20 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். சமீபத்தில் நடந்த முடிந்த ஏலத்திலும் ரூ.30 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது. அர்ஜுன் இதுவரை அண்டர் 19 இந்திய அணிக்காக, மும்பை அணிக்காக உள்நாட்டு தொடர்களில் விளையாடியுள்ளார். ஆனால், சச்சின் டெண்டுல்கர் இன்னும் ஒருமுறை கூட தன் மகன் விளையாடியதை நேரில் பார்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு டெண்டுல்கர் அளித்த பேட்டியில், "பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விளையாடுவதை பார்க்கும்போது அவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனை தவிர்க்கவே, நான் அர்ஜுன் விளையாடுவதை பார்க்கப் போவதில்லை. ஏனெனில் எந்த விதமான அழுத்தமும் இல்லாமல் அர்ஜுன் விளையாட்டைக் காதலிக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். எனவே, நான் போய் அவன் விளையாடுவதைப் பார்க்க மாட்டேன். அவன் விளையாட்டில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
அதையும் மீறி நான் போய் அர்ஜுனின் ஆட்டத்தைப் பார்க்க நேர்ந்தாலும், எங்கோ ஓரிடத்தில் ஒளிந்துகொண்டே பார்ப்பேன். அர்ஜுனுக்கோ அல்லது அவனின் பயிற்சியாளருக்கு கூட நான் எங்கிருப்பேன் என்பதை தெரியப்படுத்தாமல் பார்க்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சச்சின் மகன் அர்ஜுன் கடந்த ஆண்டு ஹரியானாவுக்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபியில் மும்பை அணி சார்பில் அறிமுகமானார். அந்தப் போட்டியில் மூன்று ஓவர்கள் வீசிய அர்ஜுன், 34 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து கடந்த ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் அங்கம் வகித்தார். பல முறை அவருக்கு அளிக்கப்படும் வாய்ப்புகள் வாரிசு முத்திரை குத்தப்படுகிறது. இது பல நேரங்களில் விவாதத்தையும் தூண்டுகிறது என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT