Published : 15 Feb 2022 03:14 PM
Last Updated : 15 Feb 2022 03:14 PM

நீங்கள் விவாதிப்பதை நிறுத்தினாலே எல்லாம் சரியாகிவிடும்: கோலிக்கு ஆதரவாக ரோஹித் கொந்தளிப்பு

கொல்கத்தா: ’விராட் கோலி விரைவில் ஃபார்முக்கு திரும்புவார்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். மேலும், ’ஊடகங்கள் அவரைப் பற்றி விவாதிப்பதை நிறுத்த வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா முழுமையாக கைப்பற்றியுள்ள நிலையில், டி20 தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. அதேபோல் ஒருநாள் போட்டியில் விட்டதைப் பிடிக்க மேற்கிந்திய தீவுகள் அணியும் உள்ளது. இதற்காக கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை, இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் தனிப்பட்ட ரீதியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியின் செயல்பாடு மோசமாக இருந்தது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில், ஒரு டக் அவுட் உட்பட மொத்தமே 36 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் கோலி.

இது விமர்சனத்துக்கு அவரை உட்படுத்தியுள்ளது. அவரின் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தநிலையில் கேப்டன் ரோஹித் சர்மா, கோலிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்தபோது விராட் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரோஹித், "கோலியைப் பற்றிய தேவையில்லாத விவாதத்தை நிறுத்திவிட்டால் எல்லாமே சரியாகிவிடும் என நினைக்கிறேன். இந்த விவாதங்கள் உங்களிடமிருந்தே தொடங்குகிறது என்று நினைக்கிறேன். ஊடகங்கள் சிறிது நேரம் அமைதியாக இருந்தால், எல்லாம் சரியாகிவிடும்.

கோலியை பொறுத்தவரை எந்தவித அழுத்தத்திலும் இல்லை. நன்றாகவே இருக்கிறார். கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக இந்திய அணியின் அங்கமாக இருக்கிறார். தனது வாழ்க்கையின் அதிக காலத்தை கிரிக்கெட்டுக்கு கொடுத்துள்ள கோலிக்கு, இந்த அழுத்தங்களை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது தெரியும். எனவே எல்லாமே ஊடகங்கள் கொஞ்சம் அமைதியாக இருந்தால் எல்லாம் சரியாகிவிடும். நீங்கள் விவாதிப்பதை நிறுத்தினால் அனைத்தும் சரிசெய்து கொள்ளப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டி20 தொடரில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். இந்தத் தொடரை காயம் காரணமாக மிஸ் செய்யும் மூன்றாவது வீரர் இவர் ஆவார். முன்னதாக கேஎல் ராகுல், அக்ஸர் படேல் ஆகியோர் தொடரில் இருந்து நீக்கப்பட்டனர் என்பது கவனிக்கத்தக்கது .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x