Published : 15 Feb 2022 12:49 PM
Last Updated : 15 Feb 2022 12:49 PM
கரோனா தடுப்பூசியை கட்டாயமாகக் செலுத்திக் கொள்வதைவிட எதிர்காலத்தில் நிறைய கோப்பைகளை இழக்கத் தயாராக இருப்பதாக பிரபல டென்னிஸ் வீரர் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இதனை மீறி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் போட்டியில் பங்கேற்க வந்த செர்பியா வீரர் ஜோகோவிச் விசாவை ஆஸ்திரேலிய அரசு ரத்து செய்தது.
இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்காமல் ஜோகோவிச் விலகினார்.
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியது. கரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள வேண்டும் என்று ஒரு தரப்பினரும், தடுப்பூசி செலுத்திக் கொள்வது தனிப்பட்ட நபரின் தேர்வு என்று மற்றொரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர்.
இந்த நிலையில் ஜோகோவிச் தனது நிலைப்பாடு குறித்து நேர்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, “நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் தனி நபருக்கான உரிமையை ஆதரிக்கிறேன். எனது சிறுவயதில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டேன்.ஆனால் உங்கள் உடலில் நீங்கள் எதை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்தற்கான சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன்.இதற்காக எதிர்காலங்களில் கோப்பைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன். அதுதான் நான் கொடுக்கும் விலையாக இருக்கும்”என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT