Published : 13 Feb 2022 12:28 PM
Last Updated : 13 Feb 2022 12:28 PM
பெங்களூரு: 2022 ஐபிஎல் மெகா ஏலத்தின் முதல்நாளில் அன் கேப்டு பிளேயர்ஸ் எனப்படும் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களை ஏலம் எடுப்பதில் அணி உரிமையாளர்கள் ஆர்வம் காட்டினர். இதில், மற்ற அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்த வீரர் என்றால் அது கர்நாடக வீரர் அபினவ் மனோகர் சதராங்கனி ஏலம் தான்.
அவருக்கு அடிப்படை விலை ரூ.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கடும்போட்டி போட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ரூ.2.60 கோடிக்கு அவரை வாங்கியது. சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில், அதிகம் அறியப்படாதவர் இந்த அபினவ் மனோகர். மேலும், மூன்று மாதங்கள் முன்பு தான் இவர் கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். அதற்குள் இவ்வளவு மவுசு ஏற்படவும், ஏலம் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டியதன் பின்னணியில் அவரின் பெர்பாமென்ஸ் காரணமாக உள்ளது.
கர்நாடக பிரீமியர் லீக் [கேபிஎல்] டி20 போட்டிகள் தான் இவருக்கு வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. கடந்த சில வருடங்களாக நடைபெறும் கேபிஎல் டி20 தொடரில் கடந்த நவம்பரில் நடத்த சீசனில்தான் முதல்முறையாக அறிமுகம் ஆனார். முதல் ஆட்டத்திலேயே ஐந்தாவது இடத்தில் இறங்கி 49 பந்துகளை சந்தித்து 70 ரன்கள் எடுத்த அபினவ், பவுலிங்கும் செய்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒட்டுமொத்தமாக அந்த தொடரில் நான்கு இன்னிங்ஸ்களில் விளையாடி 54 சராசரி மற்றும் 150 ஸ்ட்ரைக் ரேட் உடன் 162 ரன்கள் சேர்த்திருந்தார்.
அதேபோல் டிசம்பரில் விஜய் ஹசாரே டிராபி தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் தமிழ்நாடு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 32 பந்துகளில் 34 ரன்களை எடுத்தது இவரை ஐபிஎல் வரை கொண்டுவந்துள்ளது. மாநில அணிக்காக அபினவ் விளையாடியது நவம்பர் முதல் தான் என்றாலும், அதற்கு முன்னதாகவே மும்பை இந்தியன்ஸ் அணியால் சில ஆண்டுகளுக்கு முன் பயிற்சிக்கு அழைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு சிறப்பாக செயல்படாததால் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனிடையே, தான் மாநில கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு இப்போது ஐபிஎல் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
பேட்டிங்கில் ஹிட்டர் ஆக அறியப்படும் அபினவ் இம்முறை ஐபிஎல்லில் பல சிக்ஸர்களை பறக்கவிடுவார் என்கிறார்கள் அவரின் சக வீரர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT