Published : 12 Feb 2022 02:39 PM
Last Updated : 12 Feb 2022 02:39 PM
பெங்களூரு: ஐபிஎல் 2022 மெகா ஏலத்தை நடத்தி வந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் ஏலத்தின் நடுவே மயக்கமடைந்து கீழே சரிந்தார். இதனால் ஏலம் சிறிதுநேரம் தடைபட்டுள்ளது.
2022 ஐபிஎல் மெகா ஏலம் இன்றும், நாளையும் (பிப்.12, 13) பெங்களூருவில் நடைபெறுகிறது. இன்று காலையில் இருந்து ஏலம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் சுற்றில் மார்கியூ எனப்படும் நட்சத்திர வீரர்கள் விற்பனை நிறைவு பெற்ற நிலையில், இரண்டாம் சுற்று ஏலம் தொடங்கி நடைபெற்றுவந்தது.
இதனிடையே, ஏலத்தில் ஈடுபட்டிருந்த ஹேமர்மேன் ஹக் எட்மீட்ஸ் ஏலத்தின் இடையே மயக்கம் அடைந்தது சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை வீரர் வணிந்து ஹசரங்காவை ஏலம் விட்டுக்கொண்டிருந்தபோது நிலைகுலைந்து விழுந்தார். எனினும், ஹக் எட்மீட்ஸ் தற்போது நன்றாக இருப்பதாக அணிகளின் பிரதிநிதி தெரிவித்துள்ளார். இதனால், மீண்டும் சிறிது நேரத்தில் ஏலம் தொடங்குகிறது.
ஐபிஎல் தொடக்கத்தில் இருந்து மெகா ஏலத்தை நடத்தி வந்தவர் ஹேமர்மேன் ரிச்சர்டு மேட்லி. இவர் 2017 வரை ஏலம் நடத்திவந்தார். இவருக்கு பிறகு 2018 ஆம் ஆண்டு பிசிசிஐயால் நியமிக்கப்பட்டவர் தான் ஹக் எட்மீட்ஸ். எட்மீட்ஸ் ஏலங்களை நடத்துவதில் 35 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.
உலகளவில் 2,500 க்கும் மேற்பட்ட ஏலங்களை தலைமை தாங்கி நடத்தியுள்ளார். ஓவியங்கள், விளையாட்டு நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏலங்களில் அவருக்கு அனுபவம் உள்ளது. அதைவிட அவர் கலை விரும்பியும்கூட. மேட்லிக்குப் பிறகு ஐபிஎல் மெகா நிகழ்வை நடத்தும் பெருமையையும் சிறப்புரிமையையும் பெற்ற இரண்டாவது நபர் இவர்தான் என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT