Published : 09 Feb 2022 05:56 PM
Last Updated : 09 Feb 2022 05:56 PM
அகமதாபாத்: மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தனது இன்னிங்ஸில் 237 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் முன்னணி வீரர்கள், மேற்கிந்தியத் தீவு பவுலர்களின் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்துவருகிறது. கே.எல்.ராகுல் மீண்டும் அணியினருடன் இணைந்துள்ளதால் இன்றைய ஆட்டத்தில் இஷான் கிஷன் நீக்கப்பட்டிருந்தார். அதேபோல் மேற்கிந்தியத் தீவுகள் அணியிலும் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டன. கேப்டன் பொல்லார்டு விளையாட காரணத்தால் இன்று நிகோலஸ் பூரான் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
டாஸ் வென்ற பூரான் முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்ய, இந்திய அணி களம்கண்டது. சர்ப்ரைஸாக இன்று ரோஹித் உடன் ரிஷப் பந்த் ஓப்பனிங் செய்தார். இந்த மாற்றம் கைகொடுக்கவில்லை. கடந்தப் போட்டியில் ஒரு விக்கெட் கூட எடுக்காத கெமார் ரோச், இந்தப் போட்டியில் முதல் ஓவரிலேயே இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவை அவுட் ஆக்கினார். இதன்பின் கோலி உடன் இணைந்த ரிஷப் பந்த் பொறுமையாக ஆடினாலும், விரைவாகவே விக்கெட்டை பறிகொடுத்தார். மேற்கிந்தியத் தீவுகள் பவுலர் ஓடென் ஸ்மித் வீசிய 12-வது ஓவரின் முதல் பந்தில் ரிஷப் பந்த்தும், கடைசி பந்தில் விராட் கோலியும் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தனர்.
இதன்பின் மிடில் ஆர்டரில் கேஎல் ராகுலும், சூர்யகுமார் யாதவும் இணைந்து அணியை மீட்டெடுத்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 49 ரன்களில் கேஎல் ராகுல் வெளியேற, சூர்யகுமார் யாதவ் தனது இரண்டாவது அரைசதத்தை கடந்தார். 64 ரன்கள் எடுத்த நிலையில் அவரும் விக்கெட்டை பறிகொடுக்க, அடுத்து வந்த இந்திய வீரர்கள் மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 237 ரன்கள் மட்டுமே எடுத்து, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 238 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜோசப் மற்றும் ஸ்மித் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தனர். 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறும் பட்சத்தில் தொடரைக் கைப்பற்றும்.
இந்திய அணி வீரர்களின் ஸ்கோர் விவரங்கள்:
ரோஹித் - 5 ரன்கள்
ரிஷப் பந்த் - 18 ரன்கள்
விராட் கோலி - 18 ரன்கள்
கேஎல் ராகுல் - 49 ரன்கள்
சூர்யகுமார் யாதவ் - 64 ரன்கள்
வாஷிங்டன் சுந்தர் - 24 ரன்கள்
தீபக் ஹூடா - 29 ரன்கள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT