Published : 08 Feb 2022 11:54 AM
Last Updated : 08 Feb 2022 11:54 AM
கபில் தேவ், கங்குலி, தோனி, கோலி... இவர்களில் இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என அடிக்கடி விவாதம் எழுகிறது. இதில் கங்குலியும், தோனியும் இறுதித் தெரிவுக்கு வருவார்கள். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்திய அணியில் கபில்தேவ், ஸ்ரீகாந்த், ரவிசாஸ்திரி போன்ற உலகக் கோப்பை வென்ற வீரர்களுக்கு கேப்டனாக இருந்தவரும், சச்சின், கும்ப்ளே, ஸ்ரீநாத், கங்குலி, திராவிட், லஷ்மண் போன்ற கிரிக்கெட் சாதனைப் பட்டியலில் இந்தியாவை இடம்பெறச் செய்த ஜாம்பவான் வீரர்களை கேப்டனாக வழிநடத்தியவருமான முகமது அசாருதீன் இதில் நினைவுகூரப்படாமலேயே போகிறார்.
நுணுக்கமான மணிக்கட்டை சுழற்றி அடிக்கும் ஷாட்டுகளுக்காகவும், ஃபீல்டிங்கில் ஸ்டைலிஷான த்ரோக்களுக்காகவும் மட்டுமல்லாமல், வேகப் பந்துவீச்சாளர்களை ஹெல்மெட் இல்லாமல் ஹூக் அடிப்பது, காலரை தூக்கிவிட்டு, அரை கை சட்டையையும் மடக்கி விட்டுக்கொண்டு ஒருவித 'புஷ்பா' ஸடைலில் களத்திற்குள் வரும் நடையிலும் அசாருதீன் நிச்சயம் ஒரு நாயகனே. உலகின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள முரளிதரனின் பந்துவீச்சை இவர் அளவுக்கு யாரும் அசால்ட்டாக எதிர்கொண்டதில்லை.
ரசிகர்கள் கபில்தேவை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, அணியில் நுழைந்து அனாயசமாக பேட்ஸ்மேனாக கலக்கத் தொடங்கினார், ஆனால் கபிலிடமிருந்த ரசிகர்களை பின் வந்த சச்சின் மொத்தமாக கபளீகரம் செய்துகொண்டார். இந்திய அணியை 3 உலகக்கோப்பை தொடர்களுக்கு வழிநடத்தியுள்ளார். அனைத்திலும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளோம்.
கபில்தேவ் உட்பட சீனியர் வீரர்களையும், கும்ப்ளே, ஸ்ரீநாத் போன்ற பந்துவீச்சாளர்களையும், சச்சின், கங்குலி, திராவிட் உள்ளிட்ட பேட்டர்களையும் முழுமையாக பயன்படுத்திக்கொண்ட கேப்டன் இவர். சச்சினை ஒரு பந்துவீச்சாளராகவும் நன்கு பயன்படுத்தியவர். தவிர, அவரை முதன்முதலில் (1994) துவக்க வீரராகவும் களமிறக்கினார். 1998-ல் தான் இரண்டாவது முறையாக கேப்டனானபோது நான்காவது இடத்தில் இறங்கிக்கொண்டிருந்த டெண்டுல்கரை மீண்டும் துவக்க வீரராக்கினார். அந்த ஆண்டுதான் சச்சின் பேட்டிங்கில் உச்சத்தை தொட்டார்.
ராபின்சிங், மோங்கியா போன்ற பகுதி நேர பேட்டர்களை வெற்றிகரமாக ஒன் டவுனில் இறக்கியதும், பேட்டர்களை பகுதி நேர பந்துவீச்சாளர்களாக பயன்படுத்தியதால் அவரால் நான்கு பந்துவீச்சாளர்களுடன் அணியை வழிநடத்த முடிந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் வீழ்த்த முடியாத அணியாகவும் திகழச் செய்தார்.
இவர் கேப்டனாக இருந்தபோது இப்போதுபோல் 19 வயதுக்குட்பட்ட அணியிலிருந்து வீரர்களை அள்ளிக்கொள்ளும் கொடுப்பினை இல்லை. பயிற்சியாளர் குழுவும் இல்லை. வீரர்களை தேர்வு செய்யும் உரிமையும், பயிற்சியாளரையே மாற்றிக்கொள்ளும் அதிகாரமும் கேப்டனுக்கு இல்லை. தவிர அவருக்கு சச்சின், கங்குலி, தோனிக்கு கிடைத்ததுபோல் பிசிசிஐ-யின் அதிகாரத்தின் ஏகபோக ஆதரவும் (சச்சின் - ராஜ்சிங் துங்கர்புர், கங்குலி - ஜக்மோகன் டால்மியா, தோனி - சீனிவாசன்) கிடைக்கவில்லை. ஆனால் அக்காலத்தில்தான் ஒரு தலைமுறை ஜாம்பவான் வீரர்களை இந்திய கிரிக்கெட்டுக்கு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார்.
உரிய முக்கியத்துவம் அவருக்கு தரப்படாததற்கு சூதாட்டக்காரர்களுடனான அவரது தொடர்பு குறித்த சர்ச்சைகளைக் காரணமாக சொல்வதானால், இன்றைய பிசிசிஐ தலைவர் முதற்கொண்டு அணித்தலைவர் வரை சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களில் தோன்றுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காலம் மட்டும்தான் மாறிவிட்டது போல… அந்தக் காலம்தான் அவரை இந்திய கிரிக்கெட்டின் தனித்துவமிக்க வீரராகவும் அடையாளப்படுத்தியுள்ளது. முகமது அசாருதீனுக்கு இன்று - பிப்.8 - பிறந்தநாள்.
பிறந்தநாள் வாழ்த்துகள் அசார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT