Published : 07 Feb 2022 04:13 PM
Last Updated : 07 Feb 2022 04:13 PM
தர்மசாலா: ஆன்டிகுவாவில் நடந்த ஐ.சி.சி யு19 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சரித்திரம் படைக்க உதவியவர் ராஜ் அங்கத் பாவா. இந்தத் தொடர் முழுவதுமே ராஜ் பாவா, இந்திய அணிக்கு சிறப்பான ஆல் ரவுண்டர் பெர்ஃபாமென்ஸை வெளிப்படுத்தினார். தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நான்கு விக்கெட்டுகள், அயர்லாந்துக்கு எதிராக 42 ரன்கள், உகாண்டாவுக்கு எதிராக 14 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உட்பட108 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள்எடுத்தது, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இறுதிப்போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் என தொடர் முழுவதுமே ஸ்டார் ஆல் ரவுண்டராக செயல்பட்டுள்ளார்.
வேகப்பந்துவீச்சு முதல் பேட்டிங் வரை ராஜ் பாவாவின் சிறந்த செயல்திறனுக்கு பின்னால் ஒரு பெரிய கதை உள்ளது. ஹிமாச்சல் மண்ணின் மைந்தனான ராஜ் இன்று அடைந்துள்ள புகழை அவரது தந்தை சுக்விந்தர் பாவா 22 ஆண்டுகளுக்கு முன்பே இதேபோன்றொரு யு19 உலகக் கோப்பை தொடரில் மூலமாக பெற்றவர். 2000-ல் நடந்த யு19 உலகக் கோப்பை தொடரில் முகமது கைஃப் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றதில் முக்கிய வீரராக இருந்தவர் யுவராஜ் சிங். அவருக்கு பயிற்சியாளராக இருந்ததற்காக அன்று சுக்விந்தர் பாவா கொண்டாடப்பட்டார்.
பயிற்சியாளர் மட்டுமல்ல, சுக்விந்தர் பாவாவும் 1988-ல் இந்திய யு19 அணி முகாமில் ஒரு வீரராக இருந்தார். தந்தை ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் ராஜும் இயல்பாகவே கிரிக்கெட் விளையாட்டை தேர்ந்தெடுக்கவில்லை. பள்ளியில் எப்போதும் முதல் ரேங்க் வரக்கூடிய மாணவர் ராஜுக்கு பஞ்சாபி நடனமானா பாங்க்ரா கலைஞராக வேண்டும் என்பதே விருப்பமாக இருந்துள்ளது. 13 வயதில் தந்தையுடனான தர்மசாலா பயணம்தான் அந்த எண்ணத்தை மாற்றி கிரிக்கெட் அவர் வாழ்க்கையில் நுழைந்துள்ளது. சண்டிகர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த சமயத்தில்தான் சுக்விந்தர் சிங் பாவா ஒருநாள் தனது மகனை மைதானத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அன்று மைதானத்தில் சுக்விந்தர் பயிற்சி கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங்கிற்கு. யுவராஜின் பேட்டிங் ராஜ்ஜை கவர, அவரை இமிடேட் செய்ய நினைத்து அதேபோல பேட்டிங் செய்வதை தொடங்கியுள்ளார். இப்படி ஒவ்வொரு நாளும் யுவராஜின் ஆட்டத்தை பார்த்து அவரை ரோல்மாடலாக கொண்டு கிரிக்கெட் விளையாட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ராஜ் மீது யுவராஜ் சிங்கின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்றால், இயல்பாகவே வலதுகை பழக்கம் கொண்ட ராஜ், யுவராஜை போல ஆட வேண்டும் என்பதற்காக இடதுகை பேட்ஸ்மானாக தன்னை பழக்கப்படுத்தி கொண்டுள்ளார். ராஜ்ஜின் இந்தப் பழக்கத்தை திருத்தி இயல்பான முறையில் ஆட்டத்தை வெளிப்படுத்த சுக்விந்தர் முயன்றுள்ளார்.
அதனால் பெரிதாக பலன் இல்லை. சுக்விந்தர் இருக்கும்போது அவருக்காக வலதுகையில் பேட்டிங் விளையாடிவிட்டு, அவர் சென்றபிறகு இடதுகையை பயன்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் சுக்விந்தர், ராஜை அவரின் போக்கிலேயே விட்டுள்ளார். பேட்டிங்கில் விட்டுவிட்டாலும், பந்துவீச்சில் ராஜ் நினைத்தை செய்ய சுக்விந்தர் அனுமதிக்கவில்லை. ஆரம்பத்தில் சுழற்பந்துவீசி கொண்டிருந்த ராஜை வேகப்பந்துவீச்சு பக்கம் திருப்பியது சுக்விந்தரே. "வேகப் பந்துவீச்சு அவரது டிஎன்ஏவில் உள்ளது என்பதால் அவனை அதற்கு பழக்கப்படுத்தினேன்" என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் சுக்விந்தர். அப்படிச் சொல்ல காரணம் சுக்விந்தர் ஒரு வேகப்பந்துவீச்சாளர். அதுமட்டுமில்லாமல், அவரின் குடும்பமே விளையாட்டை நேசிக்கும் ஒரு குடும்பம். ராஜின் தாத்தா, தர்லோச்சன் சிங் பாவா ஒரு ஹாக்கி வீரர். 1948-ல் நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் ஒலிம்பிக் ஹாக்கி போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.
பஞ்சாப் U-16 அணியில் இடம்பிடித்தபோது ராஜ் வேகபந்துவீச்சில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளார். இதனை கவனித்த சுக்விந்தர், தன்னைப் போலவே தனது மகனும் ஒரு நல்ல ஆல்ரவுண்டராக்க வேண்டும் என்பதற்காக சில ஆண்டுகள் ராஜ் பந்துவீச தடைவிதித்து முழுமுழுக்க பேட்டிங்கில் கவனம் செலுத்தவைத்துள்ளார். சுக்விந்தரின் இந்த வற்புறுத்தலுக்குப் பின்னால் இருந்த காரணம், ராஜ் ஒரு டெயிலண்டராக இருக்க விரும்பாததன் வெளிப்பாடே. "ராஜின் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினேன், சரியான பேட்ஸ்மானாக, நெருக்கடியான சூழ்நிலைகளில் அவன் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நான் விரும்பினேன். அவன் பேட்டிங்கில் யுவராஜ் போலவும், பந்துவீச்சில் கபில்தேவ் போல இருக்க வேண்டும் என்று நான் விரும்பினேன். ஒரு முழுமையான ஆல்ரவுண்டராக வேண்டும் என்றால் பேட்டிங் செய்ய வைப்பது முக்கியம். இதனால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக அவனை வேகப்பந்துவீச அனுமதிக்கவில்லை" என்று மனம் திறக்கும் சுக்விந்தரின்பயிற்சிக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது.
ஒரு சரியான ஆல்ரவுண்டரை உருவாக்க வேண்டும் என்ற சுக்விந்தரின் கனவு அவரது மகனின் வளர்ச்சியில் நிறைவேறியுள்ளது. இன்று இந்தியா ஐந்தாவது முறையாக ஜூனியர் உலகக் கோப்பையை கைப்பற்றியதில் சுக்விந்தர், ராஜுக்கு கொடுத்த பயிற்சி முக்கிய பங்காற்றியுள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட்டின் `ரைஸிங் ஸ்டார்' ஆக உருவெடுத்துள்ளார் ராஜ் பாவா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT