Published : 06 Feb 2022 07:43 PM
Last Updated : 06 Feb 2022 07:43 PM
அகமதாபாத்: பவுலிங்கிலும் பேட்டிங்கிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
முன்னணி வீரர்கள் சிலர் இல்லாத நிலையிலும், இந்திய அணி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை வசப்படுத்தியது. இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் 1000-வது ஒருநாள் போட்டியில் பதியப்பட்ட வெற்றி என்ற சிறப்பும் சேர்ந்துள்ளது.
இப்போட்டியில் 177 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் பேட் செய்யத் தொடங்கிய இந்திய அணி, 28 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ரோஹித் சர்மா 51 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். அவருடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 36 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். விராட் கோலி 8 ரன்களிலேயே பெவிலியன் திரும்பினார். ரிஷப் பன்ட் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ரன் அவுட் ஆனார்.
13-வது ஓவரிலிருந்து 18-வது ஓவருக்கு விராட் கோலி, இஷான் கிஷன், ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் அடுத்தடுத்து ஆட்டமிந்தாலும், பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - தீபக் ஹூடா இணை வலுவான களத்தில் நின்றது. சூர்யகுமார் ஆட்டமிழக்காமல் 34 ரன்களையும், தீபக் ஆட்டமிழக்காமல் 26 ரன்களையும் சேர்த்தனர்.
முன்னதாக, மேற்கிந்திய தீவுகள் தனது இன்னிங்ஸில் 43.5 ஓவர்களில் 176 ரன்கள் எடுத்த நிலையில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹோல்டர் 57 ரன்களும், ஆலென் 29 ரன்களும் சேர்த்தனர். ஏனையோர் சொற்ப ரன்களே எடுத்தனர்.
இந்திய தரப்பில் மிகச் சிறப்பாக பந்துவீசிய சாஹல் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். பிரதிஷ் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.
இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டிவென்டி 20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது ஒருநாள் போட்டி குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இது இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பது கவனத்துக்குரிய சிறப்பு. கிரிக்கெட் வரலாற்றில் இந்தச் சிறப்பை எட்டும் முதல் அணியும் இந்தியாதான்.
விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு, புதிய கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிறங்கிய முதல் ஒருநாள் போட்டித் தொடரும் இதுவாகும். இதனிடையே, ஸ்ரேயாஸ் அய்யர், ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய முன்னணி வீரர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி தனிமைப்படுத்திக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பழம்பெரும் பாடகர் லதா மங்கேஷ்கரின் மறைவையொட்டி, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்தப் போட்டியில் கறுப்பு பேட்ச் அணிந்து விளையாடினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT