Published : 03 Feb 2022 06:39 PM
Last Updated : 03 Feb 2022 06:39 PM

ரஞ்சி டிராபியில் விளையாடுங்கள் - புஜாரா, ரஹானேவுக்கு கங்குலியின் அட்வைஸ்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான புஜாரா, ரஹானே ஆகிய இருவரும் மீண்டும் ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்று விளையாட வேண்டும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி மோசமான தோல்வியை தழுவியதற்கு ரஹானே, புஜாராவின் மோசமான ஃபார்ம் ஒரு காரணமாக இருந்தது. பந்து வீச்சாளர்கள் தங்கள் பணியைச் சிறப்பாகச் செய்தபோதிலும், பேட்டிங்கில் மூத்த வீரர்களான புஜாரா, ரஹானே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் சேர்த்து மொத்தத்தில் ரஹானே (136 ரன்கள், சராசரி 22), புஜாரா (154) ரன்கள் மட்டுமே எடுத்திருந்தனர். மோசமான ஃபார்ம் காரணமாக ரஹானே, புஜாரா இருவரையும் அணியிலிருந்து நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி இந்த இருவர் தொடர்பாகவும் பேசியுள்ளார். "இருவரும் மிகச் சிறந்த வீரர்கள். அவர்கள் மீண்டும் ரஞ்சி டிராபிக்கு சென்று நிறைய விளையாடுவார்கள் என்று நம்புகிறேன். அதை அவர்கள் நிச்சயம் செய்வார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் நிறைய போட்டிகள் விளையாடிய பிறகு மீண்டும் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு திரும்புவதில் எந்த பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. ரஞ்சி டிராபி ஒரு பெரிய போட்டி தொடர். நாங்கள் அனைவரும் அந்த போட்டிகளில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் ரஞ்சி தொடரில் திரும்ப விளையாடுவார்கள்.

ரஹானே, புஜாரா இருவரும் கடந்த காலங்களில் லிமிடெட் ஓவர்கள் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடும்போது ரஞ்சி தொடர்களில் விளையாடியுள்ளனர். எனவே, அது ஒரு பிரச்சினையாக இருக்காது" என்று தெரிவித்துள்ளார் கங்குலி.

2005-ல் இந்திய அணியில் இடம்பெற்றிருந்த கங்குலி ஃபார்மின்மையால் தவித்தபோது அவரே மீண்டும் ரஞ்சி தொடர்களில் பங்கேற்று விளையாடினார் என்பதும், அந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய பிறகு இந்திய அணிக்கு மறுபிரவேசம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது புஜாரா மற்றும் ரஹானே ஆகியோரும் அதே பாதையை பின்பற்ற கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x