Published : 03 Feb 2022 08:28 AM
Last Updated : 03 Feb 2022 08:28 AM

காமிக்ஸ் சூப்பர்ஹீரோவாகும் தோனி - வைரலாகும் புதிய லுக்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ‘அதர்வா: தி ஒரிஜின்’ என்ற கிராஃபிக் நாவலில் நாயகனாக தோன்றவுள்ளார்.

ரமேஷ் தமிழ்மணி என்பவர் எழுதும் கிராஃபிக் நாவல் ‘அதர்வா: தி ஒரிஜின்’. விர்ஸு ஸ்டூடியோஸ் மற்றும் மிடாஸ் டீல்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த கிராஃபிக் நாவலின் நாயகனான அதர்வா என்ற சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்துக்கு கிரிகெட் வீரரான எம்.எஸ்.தோனியின் தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கிராஃபிக் நாவலுக்கான மோஷன் போஸ்டரை இன்று தோனி தனது அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’, ‘பாகுபலி’ போன்ற வரலாற்றுக் கதையை பின்னணியாக கொண்ட இந்த கிராஃபிக் நாவலில் தோனியின் தோற்றம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நாவலுக்காக 150 ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த நாவல் குறித்து தோனி கூறியுள்ளதாவது:

“இந்த நாவலில் இணைந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். ‘அதர்வா: தி ஒரிஜின்’ ஆர்வத்தை தூண்டக் கூடிய விறுவிறுப்பான கதைக்களத்தையும், அட்டகாசமான ஓவியங்களை கொண்ட ஒரு கிராஃபிக் நாவல். இந்தியாவின் முதல் புராண சூப்பர்ஹீரோவை அறிமுகப்படுத்தும் எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணியின் முயற்சி ஒவ்வொரு வாசகரையும் மென்மேலும் படிக்கத் தூண்டும்”

இவ்வாறு தோனி கூறியுள்ளார்.

இது குறித்து ரமேஷ் தமிழ்மணி கூறும்போது, “இது என்னுடைய கனவு படைப்பு. என் இதயத்துக்கு நெருக்கமான ஒன்று. இதை நாங்கள் உருவாக்க பல ஆண்டுகளை செலவு செய்துள்ளோம். அதர்வா கதாபாத்திரத்தில் தோனி தோன்றுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது” என்றார்.

தோனியின் இந்த புதிய தோற்றம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காமிக்ஸ் விரைவில் அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x