Published : 04 Apr 2016 10:30 AM
Last Updated : 04 Apr 2016 10:30 AM
உலகக் கோப்பைட் டி20 தொடர் முழுதும் நம்பமுடியாத அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி கோப்பையை வென்றது மேற்கிந்திய தீவுகள். அதன் கேப்டன் டேரன் சமி வெற்றிக்குப் பிறகு உணர்ச்சி பொங்க தனது கருத்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
"நான் கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அவர் இல்லையென்றால் எதுவும் சாத்தியமாகியிருக்காது. எங்கள் அணியில் பாதிரியாராக ஆந்த்ரே பிளெட்சர் இருக்கிறார். அவர் எப்போதுமே வேண்டுதல் நடத்திக் கொண்டேதான் இருந்தார். எங்கள் அணியே கடவுளை வழிபாடு செய்யும் அணி. இந்த வெற்றி மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. இந்த வெற்றியை நாங்கள் நீண்ட நாட்களுக்குக் கொண்டாடவே செய்வோம்.
15 மேட்ச் வின்னர்களை வைத்திருக்கிறோம் என்று கூறினேன். எங்களுக்கு யாரும் வாய்ப்பளிக்கவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் பொறுப்பைச் சுமந்தனர். தனது அறிமுக உலகக் கோப்பையிலேயே பிராத்வெய்ட் இப்படி ஆடுவது உண்மையில் புல்லரிக்கச் செய்கிறது. கரீபிய டி20 கிரிக்கெட்டில் இருக்கும் ஆழத்தை வெளிப்படுத்துகிறது இந்த வெற்றி. நல்ல அமைப்பும் வளர்ச்சியை நோக்கிய முன்னெடுப்பும் இருக்குமேயானால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் கூட தொடர்ந்து முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
இந்தத் தொடரில் நாங்கள் விளையாடுவோமா என்று பலரும் பேசினர். எங்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்தன. எங்கள் வாரியமே எங்களை மதிக்கவில்லை என்பதாகவே உணர்ந்தோம். மார்க் நிகலஸ் எங்கள் அணியை மூளையில்லாதவர்களின் அணி என்று கேலி செய்தார். தொடருக்கு முன்பாக இத்தகைய விஷயங்கள் எங்களை நாங்கள் ஒருங்கிணைத்துக் கொள்ள உதவியது.
உண்மையில் இந்த 15 வீரர்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எவ்வளவோ எங்களைப் பற்றி பேசப்பட்டது, இந்த எதிர்மறை விஷயங்களை கடந்து வந்து இத்தகைய கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தியது, அதுவும் உணர்வு மிக்க ரசிகர்கள் முன்னிலையில் வெளிப்படுத்தியது அருமையிலும் அருமை.
பயிற்சியாளர் பில் சிம்மன்ஸுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய மேலாளர் ரால் லூயிஸ், அவர் எங்களுக்காக பட்ட கஷ்டம் அதிகம். எங்களுக்கு சீருடை கூட இல்லை. அவர் துபாயில் நாங்கள் பயிற்சியில் ஈடுபட்டது முதல் எங்களுக்காக பாடுபட்டார், அங்கிருந்து கொல்கத்தா வந்தார். எங்களுக்கு இந்த சீருடையைப் பெற்றுத்தர அவர் பட்டபாடு எங்களுக்குத்தான் தெரியும், அவருக்கு எனது நன்றிகள். எங்களது இந்த வெற்றியை மேற்கிந்திய தீவுகள் ரசிகர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறோம்.
கிரெனடாவிலிருந்து பிரதமர் கெய்த் மிட்செல் எங்களை உத்வேகப்படுத்த போட்டி தினத்தன்று மின்னஞ்சல் செய்தார். அவர் எங்களை தொடர்ந்து ஊக்குவித்து வந்தார், வெற்றி பெற வாழ்த்துகளைத் தெரிவித்தார், ஆனால் மே.இ.தீவுகள் வாரியத்திடமிருந்து இன்னும் கூட வாழ்த்துச் செய்தி வரவில்லை, இது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
இன்று நான் இந்த 15 வீரர்கள், பயிற்சியாளர்கள் அணி ஆகியோருடன் இந்த சீரிய வெற்றியைக் கொண்டாட போகிறேன். மீண்டும் இவர்களுடன் நான் எப்போது ஆடுவேன் என்று தெரியவில்லை. எங்களை ஒருநாள் போட்டிகளுக்கு தேர்வு செய்ய மாட்டார்கள். மீண்டும் டி20 எப்போது விளையாடுவோம் என்று தெரியவில்லை. எனவே இந்த வெற்றிக்காக என் அணிக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கிந்திய தீவுகள்தான் சாம்பியன் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே" என்றார் டேரன் சமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT