Last Updated : 29 Jan, 2022 07:09 PM

 

Published : 29 Jan 2022 07:09 PM
Last Updated : 29 Jan 2022 07:09 PM

டென்னிஸை விட்டே சென்றவர், மீண்டு வந்து வென்ற கதை - ஆஸ்திரேலியர்களின் நாயகி அஷ் பார்டி

மெல்போர்ன்: பெண்கள் டென்னிஸ் என்றாலே மார்கரட் கோர்ட் தொடங்கி செரீனா வில்லியம்ஸ், மரியா ஷரபோவா, இவானோவிச், கிவிட்டோவா, ஹாலப் என்ற பெயர்கள் தான் நினைவுக்கு வரும். இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் என்ட்ரி கொடுத்தவர்தான் அஷ்லிக் பார்ட்டி. 2011-ல் விம்பிள்டன் ஜூனியர் பட்டம், 2021-ல் விம்பிள்டன் சாம்பியன் பட்டம், இடையில் 2019-ல் பிரெஞ்ச் ஓபன், இதோ இப்போது ஆஸ்திரேலிய ஓபன் என்று டென்னிஸில் புதிய சரித்திரம் படைத்துக் கொண்டிருக்கிறார் இந்த உலகின் நம்பர் ஒன் வீராங்கனை.

ஆஸ்திரேலியர்களின் நீண்ட கால கனவு தங்கள் சொந்த நாட்டில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் கோப்பையை ஓர் ஆஸ்திரேலியர் வெல்ல வேண்டும் என்பதே. இதுவரை எந்த ஆஸ்திரேலியரும் இந்தக் கோப்பையை வெல்லாமல் இல்லை. 1978-ல் கிறிஸ் ஓ நெயில் வென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு 44 ஆண்டுகளாக எந்த ஓர் ஆஸ்திரேலிய வீராங்கனையும் அந்த சாதனையை புரியவில்லை. அந்த நீண்ட ஏக்கத்தை இன்று தீர்த்துவைத்துள்ளார் அஷ்லிக் பார்ட்டி. இதற்கான கோப்பை வழங்கப்பட்டபோது அஷ்லியிடம் ஒரு புகைப்படம் காட்டப்பட்டது. அந்தப் புகைப்படம் டென்னிஸ் உடனான அவரின் காதலை வெளிப்படுத்தியது. ஆறு வயதில் தனது முதல் டென்னிஸ் கோப்பையுடன் அஷ்லிக் போஸ் கொடுத்த புகைப்படம்தான் அது.

தனது 4-வது வயதிலேயே டென்னிஸ் விளையாடத் தொடங்கியவர் அஷ்லிக். பெற்றோரின் ஊக்கத்தால் நான்கு வயதில் டென்னிஸ் ராக்கெட்டை கையிலெடுத்த அவருக்கு வழிகாட்டியாக இருந்தது ஆஸ்திரேலியாவின் மற்றொரு சாதனை வீராங்கனை எவோன் கூலாகாங் காவ்லி. அவரின் பயிற்சியால் தொழில்முறை வீராங்கனையாக உருவெடுத்தார். பின்னர் மிகச் சிறிய வயதிலேயே டென்னிஸில் பல சாதனைகளை நிகழ்த்திக் காட்டினார். 2011-ம் ஆண்டு விம்பிள்டன் ஜூனியரில் சாம்பியன் ஆகி கவனம் ஈர்த்தவர், சீனியர் வீரர்களுடன் விளையாடத் தொடங்கினார். தனது 16 வயதிலேயே கேசி டெல்லாக்வாவுடன் இணைந்து ஆஸ்திரேலிய ஓபன் உட்பட மூன்று கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இரட்டையர் பிரிவில் இரண்டாம் வந்தார்.

இரட்டையர் ரேங்கிங் பட்டியலில் முன்னேறி வந்தாலும் ஒற்றையர் பிரிவில் அவர் எதிர்பார்த்தது நடக்கவில்லை. ஒற்றையர் பிரிவில் அவர் கலந்துகொண்ட 12 கிராண்ட் ஸ்லாம்களில், மூன்று முறை தகுதிச்சுற்றை தாண்டவில்லை. ஏழு முறை முதல் சுற்றுவரை சென்றார். இரண்டு முறை இரண்டாவது சுற்று. சர்வதேச தரவரிசையில் 300-க்கு பிறகு பின்தங்கி இருந்தபோதுதான் டென்னிஸில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது அஷ்லிக்கின் வயது 18.

கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் டென்னிஸ் பக்கம் தலைவைத்துகூட படுக்கவில்லை. மாறாக, அவர் தேர்ந்தெடுத்தது கிரிக்கெட். சிறுவயது முதல் டென்னிஸ் மீது தீராக்காதல் கொண்டவர் தோல்விகளால் கிரிக்கெட் பக்கம் சென்றுவிட்டார் நாம் நினைக்கலாம். ஆனால் அஷ்லிக் அதற்கு வேறு காரணங்கள் சொன்னார். "எனக்கு வயது குறைவுதான். ஒரு டீன் ஏஜ் பெண் என்ற முறையில் பலவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதனால் கிரிக்கெட் விளையாட முடிவெடுத்தேன்" என்று சொன்னவர் பிக்பேஷ் லீக்கில் பிரிஸ்பேன் ஹீட், குயின்ஸ்லாந்து ஃபையர் அணிக்காக மூன்று ஆண்டுகள் கிரிக்கெட் மட்டையைச் சுழற்றினார்.

பின்னர் கிரிக்கெட்டுக்கும் முழுக்குபோட்டவர், 2016 கடைசியில் மீண்டும் தனது சிறுவயது காதலனை டென்னிஸுக்கு கம்பேக் கொடுக்கிறார். இந்த கம்பேக் அவர் தொட்டதெல்லாம் அவருக்கு பொன்னாக்கி கொடுத்தது. இதனால் 2017-ன் தொடக்கத்தில் தரவரிசையில் 271-வது ரேங்கில் இருந்த அஷ்லிக், அதே ஆண்டு முடியும்போது தரவரிசையில் 17வது வீராங்கனையாக உயர்ந்தார்.

அப்போது நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் மூன்றாவது சுற்றுவரை சென்று, ஆஸ்திரேலியர்களை தன் பக்கம் திருப்பினார். WTA எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் தான் அஷ்லிக்கின் வாழ்க்கையை மாற்றியது எனலாம். டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே விளையாடும் WTA தொடரை வென்று 23 வயதில் தனது வருகையை டென்னிஸ் களத்தில் அழுத்தமாக பதிவு செய்தார். அஷ்லிக்கின் டென்னிஸ் வழிகாட்டியாக இருந்த எவோன் கூலாகாங் காவ்லி தான் கடைசியாக 1976-ம் ஆண்டு WTA தொடரை வென்ற ஒரே ஆஸ்திரேலிய வீராங்கனை. அந்த சாதனையை 43 ஆண்டுகள் கழித்து தகர்த்தார் அஷ்லிக். இது 'உலகின் நம்பர் 1 வீராங்கனை' என்ற பெருமையை பெற்றுக்கொடுத்தது. அன்றில் இருந்து இன்றுவரை ஆஸ்திரேலியர்களின் நாயகியாக வலம் அஷ்லிக் இன்று மீண்டும் ஒருமுறை தன்னை நிரூபித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x