Published : 02 Jun 2014 09:34 PM
Last Updated : 02 Jun 2014 09:34 PM
தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியின் 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி தழுவியது.
பெல்ஜியம் அணிக்கு எதிராக ஆட்டம் முடிய சில வினாடிகள் இருந்தபோது கடைசி கோலை வாங்கினர். இன்று ஒரு நிமிடம் மீதமிருக்கையில், இங்கிலாந்து வீரர்கள் பந்தை டி-வட்டத்திற்குள் கொண்டு செல்ல இங்கிலாந்து வீரரிடமிருந்து பந்தை தட்டிவிடும் முயற்சியில் இந்திய வீரர் தனது மட்டையை அவரது காலிடுக்கில் செலுத்தினார். இது முறையற்ற ஆட்டமே. நடுவர் பெனால்டி கார்னர் கொடுத்தார். இந்தியா மேல் முறையீடு செய்தது. ஆனால் ரீப்ளேயில் இந்திய வீரர் தவறு செய்தது தெரிந்தது. பெனால்டி கார்னர் உறுதி செய்யப்பட்டது.
பெனால்டி ஷாட் முதலில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் காலில் பட்டுத் திரும்பி வந்தது ஆனால் அதனை மீண்டும் கோலுக்குள் அடித்தார் இங்கிலாந்து வீரர் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வென்றது. இதன் மூலம் இங்கிலாந்து 2 போட்டிகளில் 4 புள்ளிகளைப்பெற்றது.
இந்தியா இன்னும் கணக்கைத் தொடங்கவில்லை.
முன்னதாக ஆட்டம் தொடங்கியபோது இந்தியாவின் ஆதிக்கம் அதிகமிருந்தது. 5வது நிமிடத்திலேயே இந்தியா இங்கிலாந்து எல்லைக்குள் நுழைந்தது, டி-யிற்கு வெளியே ஃப்ரீ ஹிட் கிடைத்தது. ஆனால் இங்கிலாந்து அதனை முறியடித்தது.
பிறகு ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் இந்தியா தாக்குதல் ஆட்டம் தொடுக்க இங்கிலாந்து கோலுக்குள் ஊடுருவி சென்றது. இதன் விளைவாக கடும் நெருக்கடியைச் சந்தித்த இங்கிலாந்து 3 முறை தவறு செய்தது. இது 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகளாக இந்தியாவுக்குக் கிடைக்கப்பெற்றது. ஆனால் 3 வாய்ப்புகளையுமே இந்தியா கோட்டைவிட்டது என்றே கூறவேண்டும்.
ஆட்டத்தின் 25வது நிமிடத்தில் இந்திய வீரர் சுனில் அபாரமான ஒரு ஷாட்டை இங்கிலாந்து எல்லையில் சென்று ஆடினார். கோலை நோக்கி அவர் அடித்த ஷாட்டை டி-யிற்குள் கோல் அருகில் நின்று கொண்டிருந்த ஆகாஷ் தீப் மட்டையை வைக்க முயன்றது படாமல் போனதால் கோல் வாய்ப்பு பறிபோனது.
மிக முக்கியமான தருணம் என்னவெனில் ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் யுவ்ராஜ் வால்மீகி ஒரு அபாரமான மூவுடன் சென்று பந்தை கோலுக்கு அருகில் இருந்த மந்தீப் சிங்கிற்கு அடித்தார். சுலபமாக கோலாக மாற்றியிருக்க வேண்டிய இந்த வாய்ப்பும் பறிபோனது.
வெந்த புண்ணில் வேலைப்பாய்ச்சியது போல், அடுத்த 2வது நிமிடத்தில் யுவ்ராஜ் வால்மீகி தவறு செய்ய இங்கிலாந்துக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. டிக்சன் இதனை கோலாக மாற்றினார். இங்கிலாந்து 1-0 என்று முன்னிலை வகித்தது.
ஆனால் அடுத்த 5 நிமிட நேர ஆட்டத்தில் இந்தியா சற்று ஆக்ரோஷத்தைக் கூட்ட இங்கிலாந்தின் கோல் எல்லைக்குள் இந்திய வீரர்கள் ஊடுருவினர். அப்போது தரம்வீர் சிங் சற்றும் எதிர்பாராமல் ஒரு அபாரமான ஷாட்டை ஆட அது நேராக கோலுக்குள் சென்றது. இந்தியா 1-1 என்று சமன் செய்தது. இடைவேளையின் போது ஸ்கோர் சமநிலையில் இருந்தது.
இடைவேளைக்குப் பிறகு இங்கிலாந்துக்கு முதல் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோலாக அடிக்க முடியவில்லை. பிறகு இந்தியா ஒரு விறுவிறுப்பான மூவில் பந்தை இங்கிலாந்தின் எல்லைக்குள் கொண்டு செல்ல யுவ்ராஜ் வால்மீகி அடித்த பந்தை இங்கிலாந்து முறையற்ற விதத்தில் தடுத்ததால் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பைக் கொடுத்தார் நடுவர். ஆனால் இங்கிலாந்து மேல்முறையீடு செய்து டிவி நடுவர் பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பைப் பறித்தார்.
பிறகு ஆட்டத்தின் 50வது நிமிடத்தில் சுனில், யுவ்ராஜை நோக்கி இடதுபுறமாக அபார பாஸ் ஒன்றைச் செய்தார் யுவ்ராஜ் அதனை ரிவர்ஸ் பிளிக் செய்தார் பந்து வெளியே சென்றது.
அதன் பிறகு கடைசியில் சர்தாரா சிங், மன்ப்ரீத், யுவ்ராஜ் தீவிரமாக முயற்சி செய்தனர். ஆனால் வெற்றிக்கான கோல் இந்தியாவுக்கு வரவில்லை.
இந்த நிலையில்தான் 69வது நிமிடத்தில் இந்திய வீரர் ஒருவர் இங்கிலாந்து வீரரின் கால்களைத் தடுக்கும் விதமாக மட்டையைக் கால்களுக்கு இடுக்கில் செலுத்த பெனால்டி கார்னர் இங்கிலாந்துக்கு வழங்கப்பட அது கோலாக மாறியது. இங்கிலாந்து வெற்றி பெற்றது. மீண்டும் கடைசி நேர சொதப்பலால் இந்தியா தோல்வி தழுவியது.
அடுத்ததாக இந்தியா ஸ்பெயினைச் சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT