Published : 26 Jan 2022 08:31 PM
Last Updated : 26 Jan 2022 08:31 PM
ஒருநாள் கிரிக்கெட்டில் ரவிசந்திரன் அஸ்வினுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரில் மூன்று போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது. இந்த தோல்விக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று மிடில் ஓவர்களில் தென்னாப்பிரிக்க வீரர்களின் விக்கெட்களை இந்திய பவுலர்கள் வீழ்த்தாதது தோல்விக்கான முக்கியக் காரணி.
ஒருநாள் போட்டிகளில் மிடில் ஓவர்களில் பந்துவீசிய இந்திய ஸ்பின்னர்கள் அஸ்வின், சஹால் இருவரும் சேர்ந்து மூன்று விக்கெட்களை மட்டுமே எடுத்தனர்.
இதில் அஸ்வின் பவுலிங் குறித்து முன்னாள் வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின் சமீபத்தில் டி20 அணியில் இடம்பிடித்த அஸ்வின் சிறப்பாகச் செயல்பட்டார். ஆனால் ஒருநாள் போட்டிகளில் அவர் விக்கெட் சாய்க்காதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அஸ்வினுக்கு பதில் மாற்று வீரரை சிந்திக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
ஹர்பஜன் பேசுகையில், "டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டி போன்றவற்றில் இஷாந்த் ஷர்மா மற்றும் அஸ்வின் இரண்டு பேரும் இந்திய அணிக்காக சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். அஸ்வின் ஒரு சாம்பியன் பந்து வீச்சாளர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அஸ்வினுக்கு பதிலாக ஒரு மாற்று வீரரைத் தேட வேண்டிய நேரமிது என்று தோன்றுகிறது. அவர் இடத்துக்கு குல்தீப் யாதவ் போன்ற ஒருவர் சிறந்த தேர்வாக இருக்க முடியும். குல்தீப் - சஹால் கூட்டணியை நாம் ஏற்கெனவே பரிசோதித்துள்ளோம். அவர்கள் இந்தியாவுக்காக விளையாடி தங்களை நிரூபித்துள்ளனர். எனவே அவர்களை ஏன் மீண்டும் கொண்டுவரக்கூடாது" என்று தனது யோசனையைப் பகிர்ந்துள்ளார்.
2017- 18 ஆண்டு காலத்தில் குல்தீப் - சஹால் ஜோடி இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், அதன்பிறகு குல்தீப் யாதவ் சில காலங்களாக அணிக்கு தேர்வாகவில்லை என்றாலும், சாஹல் ஒயிட்-பால் கிரிக்கெட்டில் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வருகிறார்.
இதனிடையே, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து அஸ்வின் அணிக்கு தேர்வாகினாலும் பிப்ரவரியில் நடைபெறவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என வடஇந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியை பிசிசிஐ இந்த வாரம் அறிவிக்கவுள்ளது. முழுநேர கேப்டனாக தனது இந்தத் தொடர் முதல் ரோஹித் சர்மா அணியை வழிநடத்த உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT