Published : 26 Jan 2022 02:05 PM
Last Updated : 26 Jan 2022 02:05 PM
இந்திய ஹாக்கி வீராங்கனை வந்தனா கட்டாரியா பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டு விருதுபெற தகுதியாகி இருக்கும் ஒரே ஹாக்கி வீராங்கனை இவர் மட்டுமே.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கின் அரையிறுதியில் அர்ஜென்டினா அணியுடன் போராடி தோற்றது இந்தியா. இந்த தோல்வியை அடுத்து ஹரித்வாரில் உள்ள வந்தனாவின் வீட்டின் முன்பு திரண்ட ஒரு கும்பல், அவர்களை சாதிரீதியாக பேசி, இந்திய அணியில் தலித்துகள் அதிகமாக இருப்பதாலேயே தோல்வி ஏற்பட்டது என்று கூச்சலிட்டனர்.
இந்தியாவில் கல்வியறிவு மற்றும் பொருளாதார முன்னேற்றம் நிகழ்ந்தாலும் இன்னும் சாதியை தூக்கிப்பிடிக்கும் கூட்டமும் இருக்கத் தான் செய்கிறது. அப்படிப்பட்டவர்கள் தான் அன்று வந்தனாவின் வீட்டின் முன் சாதிய ரீதியாக இழிவாக பேசினர். ஆனால் அவர்களுக்கு தேசத்துக்காக வந்தனா எவ்வளவு பெரிய வலியை கடந்து வந்துள்ளார் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
டெக்னீஷியன் மகள் டு தேசத்தின் மகள்!
உத்தரகாண்ட்டின் புகழ்பெற்ற ஹரித்வார் தான் வந்தனாவின் சொந்த ஊர். இந்தியாவின் சிறு நகர பெண்களுக்கே உண்டான கூச்சமும், தயக்கமும் கொண்ட பெண்ணாக வந்தனா சிறுவயதில் வளர்ந்துவந்தார். ஆனால் அவரின் தந்தைக்கு வந்தனா அப்படி இருப்பது பிடிக்காது. மத்திய அரசின் பெல் நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணியாற்றிய வந்தனாவின் தந்தை கொடுத்த ஊக்கமே அவரின் நிலை மாறியது.
வந்தனாவின் தந்தையும் ஒரு விளையாட்டு வீரரே. அவர் தனது இரண்டு மகள்களையும் விளையாட்டுத் துறையில் சாதிக்க ஆசைப்பட்டார். மூத்த மகளை ஹாக்கி பயிற்சிக்கு அனுப்பியபோது அவர் விளையாடுவதை பார்த்து இளைய மகளான வந்தனாவும் ஹாக்கி மட்டையை கையிலெடுத்தார். அப்படி ஒருநாள் வந்தனாவின் ஆட்டத்தை பார்த்த பயிற்சியாளருக்கு அவரின் தனித்த ஆட்டத் திறன் கவர, முறைப்படி பயிற்சி கொடுத்தார்.
அந்த பயிற்சி 15 வயதிலேயே தேசிய ஜூனியர் அணிக்குள் நுழைந்தார் வந்தனா. எதிரணியை பற்றி எந்த பயமும் கிடையாது. பந்து மட்டைக்கு வந்துவிட்டால் அது கோல் போஸ்ட்டை நோக்கி முன்னேறி கொண்டுச் செல்ல வேண்டும் என்பதே வந்தனா ஆட்டத்தின் தனிப்பட்ட திறன். இத்திறனே 15 வயதில் தொடங்கி கிட்டத்தட்ட 15 வருடம் இந்திய அணிக்காக அவரை விளையாட வைத்துள்ளது. 29 வயதான இவர், 250 சர்வதேச போட்டிகளில் விளையாடி இதுவரை 67க்கும் அதிகமான கோல்களை அடித்துள்ளார்.
தற்போதைய இந்திய மகளிர் ஹாக்கி அணியை எடுத்துக்கொண்டால் கேப்டன் ராணி ராம்பாலுக்கு அடுத்த இடத்தில் அதிக போட்டிகளில் பங்கேற்றவர், அதிக கோல் அடித்தவர் பட்டியலில் இருப்பவர் வந்தனா மட்டுமே. இந்திய அணியின் அட்டாக்கிங் கிங்காக, பார்வர்ட் பிளேயராக பல ஆண்டுகளாக கைகொடுத்து வருகிறார். 2013 ஜூனியர் உலகக் கோப்பையில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்ற வரலாறு, வந்தனாவின் ஆட்டத்தாலே சாத்தியப்பட்டது. அந்த உலகக்கோப்பைத் தொடரில் அதிக கோல் அடித்த இந்தியா வீராங்கனை வந்தனா தான். 2015 உலக ஹாக்கி லீக்கில் 11 கோல்கள் அடித்தார்.
இவ்வளவு ஏன் வந்தனா சாதிய ரீதியாக அவதூறு செய்யப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா 41 ஆண்டுகளுக்குப்பிறகு காலிறுதி தகுதிபெற்றதும் வந்தனாவின் சிறப்பான ஆட்டம் காரணமாகவே. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய சாம்பியன்ஷிப், ஆசிய கோப்பை, காமென்வெல்த் போட்டி என எதை எடுத்துக்கொண்டாலும் கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணியின் தூணாக வலம்வருகிறார் வந்தனா.
இந்த புள்ளி விவரங்களால் வந்தனாவை அனைவரும் தேசத்தின் மகளாக குறிப்பிடவில்லை. தேசத்துக்காக அவர் அனுபவித்த வலியும் அதற்கு ஒரு காரணம். தேசத்துக்காக ஹாக்கி விளையாட வேண்டும் என வந்தனாவுக்கு ஆர்வம் எழ ஊக்குவித்தது அவரின் தந்தை. அவருக்கு எல்லாமுமாக இருந்த தந்தை டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்னதாக இறந்துவிட்டார். அப்போது ஒலிம்பிக் பயிற்சிக்காக பெங்களூரு கேம்ப்பில் பயோபபுள் பாதுகாப்பில் இருந்தார் வந்தனா. அவர் நினைத்தால் பயோபபுளில் இருந்து வெளிவந்து தந்தையை கடைசியாக ஒருமுறை சந்திக்க சென்றிருக்கலாம்.
மாறாக, "நான் இறுதி அஞ்சலி செல்வதைவிட, ஒரு மகளாக இந்தியாவுக்கு பதக்கம் வெல்லவதையே என் தந்தை விரும்புவார். என் தந்தையை பெருமைப்படுத்த விரும்புகிறேன்" என்று ஒலிம்பிக்கில் அணியை கோப்பை வெல்லவைக்க வேண்டும் என்ற கனவுக்காக தந்தையை பார்க்க செல்லவில்லை. உண்மையில் வந்தனாவின் தந்தையும் இதையே சொல்லியிருப்பார். அவர்கள் அவ்வளவு தேசபக்தி மிகுந்தவர்கள்.
சாதிய அவதூறுகளை சந்தித்தபோதும், "நாங்கள் தேசத்துக்காக விளையாடுகிறோம். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். ஹாக்கியை மட்டும் சிந்திப்போம். நாங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், நாட்டுக்காக விளையாடுகிறோம். தேசம் என்ற எண்ணத்தில் நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்" என்று தேசத்தின் மகளாக தனது பதிலை வெளிப்படுத்தினார்.
சாதி, மத பிரிவினைகளை அப்பாற்பட்டதே விளையாட்டு. விளையாட்டால் மட்டுமே தேசங்களை ஒன்றிணைக்க முடியும். அதற்கான முயற்சியில் இருக்கும் வந்தனாவுக்கு மத்திய அரசு நேற்று, பத்ம ஸ்ரீ விருது அறிவித்து கௌரவித்துள்ளது. இந்தியாவின் இந்த உயரிய விருது சாதிய ரீதியாக அவரை அவதூறு செய்தவர்களுக்கு கிடைத்த சவுக்கடி.
வாழ்த்துகள் வந்தனா கட்டாரியா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT